வாழ்வில் முன்னேற பெரிய லட்சியத்தை நிர்ணயித்து கொள்ள வேண்டும். அத்துடன் சுய ஒழுக்கம், நேரத்தை கையாளும் திறன் இருந்தால், வாழ்வில் நினைத்ததை சாதிக்கலாம் என கவர்னர் ரவி பேசினார்.
கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த, எண்ணித் துணிக என்ற இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், கவர்னர் ரவி பேசியதாவது:
சிறப்பு குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு, சமூகத்திலும், அரசிடமும் போதுமானதாக இல்லை. அவர்களை பல கண்ணோட்டங்களில் சமுதாயம் பார்த்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள், இவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் எவ்வளவு சிறப்பு குழந்தைகள் உள்ளனர் என, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் தரவு கேட்டேன். அவர்கள், 50 லட்சம் பேர் உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், நிறைய குழந்தைகள் இருப்பர் என்று தோன்றுகிறது.
இப்படி உள்ள குழந்தைகளை, சமுதாயம் எப்படி பார்க்கும் என்ற மனநிலையிலேயே பெற்றோர் இருந்து விடுகின்றனர். குறிப்பாக, 75 சதவீத பெற்றோர், இக்குழந்தைகள் பிறந்த உடன் தற்கொலை எண்ணங்களுக்கு செல்வதாக கேள்விப்பட்டேன்; இந்த எண்ணம் மாற வேண்டும்.
லட்சியத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இளம் தலைமுறையினர் எதுவாக வாழ்வில் வர வேண்டும் என்று நினைத்தாலும் வரலாம்; அதற்கான வாய்ப்பு கதவுகள் இன்று திறந்துள்ளன.
வாழ்வில் முன்னேற பெரிய லட்சியத்தை நிர்ணயித்து கொள்ள வேண்டும். அத்துடன் சுய ஒழுக்கம், நேரத்தை கையாளும் திறன் இருந்தால், வாழ்வில் நினைத்ததை சாதிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...