தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் தொழில்துறை சார்நிலை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
‘தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை வளர்த்தல்’ என்ற திட்டத்தின்கீழ் கல்வி மற்றும் தொழில்துறை எதிர்பார்ப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்கவும், பரிந்துரைக்கவும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்துக்கு அம்மன்றத்தின் உறுப்பினர் - செயலர் எஸ்.வின்சென்ட் தலைமை தாங்கினார்.
கோவை, கடலூர், தருமபுரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 15 கல்வி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இத்திட்டம் குறித்து மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் .வின்சென்ட் கூறியதாவது:
இந்த புதிய திட்டம் மூலம் மாணவர்களுக்கு சிக்கலைக் கண்டறியும் திறன், பொருளாதாரத் தீர்வு திறன், தொழில்முனைவு, ஆளுமை பயிற்சி, ஆங்கில தொடர்புத்திறன் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். மனிதவள மேலாளர்கள், தொழில் வல்லுநர்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் மற்றும் வங்கி பணியாளர்கள் ஆகியோர் பயிற்சி அளிப்பர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இறுதியாண்டு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் 300 பேர் என, தேர்வு செய்யப்பட்ட 15 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 4,500 பேர் தேர்வு செய்யப்படுவர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாணவர் தேர்வு அமைந்திருக்கும். இந்த பயிற்சி முற்றிலும் இலவசம். மாணவர்களுக்கு இரண்டு குழுக்களாக 3 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சித் திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல்கட்டப் பயிற்சி ஜனவரி 7 முதல் 9-ம் தேதி வரையும், 2-வது கட்டப் பயிற்சி ஜனவரி 21 முதல் 23 வரையும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...