சிறுதுளி பெருவெள்ளம் என்று சிறுசேமிப்பிற்கு உதாரணம் சொல்வார்கள். ஒரு குடும்ப வருமானத்தில் முதல் செலவு சேமிப்பு என்பார்கள். மற்ற செலவுகள் அனைத்தும் அடுத்தபடிதான். இப்படிப்பட்ட சேமிப்பு பழக்கத்தை பெரியவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. குழந்தைகளுக்கும் அவசியம் கற்றுத்தர வேண்டிய பொருளாதார பாடம்.
பெரியவர்களிடம் சேமிப்பு பழக்கம் இருந்தால்தான் குழந்தைகளிடமும் அப்பழக்கம் வரும். இது குறித்து பள்ளிகளில் சொல்லி கொடுப்பதில்லை. வீட்டில் பெற்றோர்கள்தான் சேமிப்பு பற்றிய முக்கியத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
உண்டியல் சேமிப்பு
சேமிப்பு பழக்கத்தின் முதல் படியாக, குழந்தைகளுக்கு உண்டியல் சேமிப்பு பழக்கத்தை அறிமுகப்படுத்தலாம். அது காசாகவோ, பணமாகவோ கொடுத்து அது எவ்வளவு என்று எண்ணிப்பார்த்து உண்டியலில் போட சொல்ல வேண்டும். இதில் சேரும் பணத்தில் அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஊக்குவிக்கலாம். அல்லது தேவை உள்ளவர்களுக்கு இப்பணத்தை கொடுத்து உதவலாம் என்ற பழக்கத்தை கற்றுக்கொடுப்பது இன்னும் சிறப்பு. நிறைய சேமித்தால் அழகான பரிசுப் பொருளை வாங்கித் தந்து குழந்தைகளை மென்மேலும் ஊக்குவிக்கலாம்.
எது அத்தியாவசியம்?
உண்டியலில் காசு சேமிப்பது ஒரு வகை என்றால், அத்தியாவசியம் அல்லாத பொருட்களை வாங்காமல் தவிர்ப்பதும் சேமிப்பின் ஒரு அங்கமாகும். பொதுவாக குழந்தைகள் கவர்ச்சிகரமாக எந்த பொருளை பார்த்தாலும் அது வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அது குழந்தையின் இயல்பு. பெற்றோர்கள்தான் அப்பொருள் அவசியமா அல்லது அவசியமில்லையா என்பது குறித்து புரிய வைக்க வேண்டும்.
எப்படி புரிய வைப்பது?
குழந்தைகளை கேட்பதை வாங்கிக் கொடுக்காமல் அவர்களுக்குக் கொடுக்கும் 'பாக்கெட் மணி'யில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம். அந்த 'பாக்கெட் மணி'யை பெற பொறுப்பான சிறிய சிறிய வேலைகளை செய்ய வேண்டும் அல்லது இந்தப் பாடத்தை படித்து முடிக்க வேண்டும் என்று சின்ன சின்ன டாஸ்குகளை கொடுக்கலாம். குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்தப் பொருளை வாங்க இன்னும் அதிகமாக பணம் தேவைப்படும்பட்சத்தில் அவர்களாகவே முன்வந்து வேலை செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதேசமயம் இந்த பொருள் தேவைதானா? இன்னும் பணம் சேர்த்தால் வேறு பொருளை வாங்கலாம் என்று அத்தியாவசியம் எது? அனாவசியம் எது? என்று பிரித்துப் பார்க்க பழகுவார்கள். பாக்கெட் மணி, சேவிங்ஸ் மணியாக மாறும். இப்பழக்கம் அவர்கள் வளர்ந்து பொறுப்பிற்கு வரும்போது பேருதவியாக இருக்கும்.
வரவு-செலவு கற்றுக்கொடுங்கள்
பெற்றோரின் வருமானம் எவ்வளவு, வீட்டு செலவு கணக்கு, பொழுதுபோக்கு செலவுகள், பள்ளிக் கட்டணம், மாதம் எவ்வளவு சேமிக்கப்படுகிறது என்பது பற்றி குழந்தைகளிடம் கலந்துரையாடலாம். காய்கறிக் கடை, சூப்பர் மார்க்கெட் செல்லும்பொழுது குழந்தைகளை அழைத்து செல்லலாம். ஒவ்வொரு பொருளின் விலையை சொல்லிக் கொடுக்க வேண்டும். மொத்தம் எவ்வளவு பணத்திற்கு பொருள்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற கணக்கை விளக்க வேண்டும்.
தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் கிலோ என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதையும், விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும். அத்தியாவசிய பொருளைவிட அனாவசியப் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். இதை அவர்களாகவே புரிந்து கொள்ளும்பொழுது சேமிப்பின் அவசியத்தையும் புரிந்து கொள்வார்கள்.
மருத்துவ செலவிற்கோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய செலவிற்கோ, நாம் சேமித்த பணம் கைகொடுக்கும். இதை குழந்தைகள் பார்க்கும்போது பண சேமிப்பில் உள்ள அர்த்தத்தை உணர்வார்கள். நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணமானது நமது இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுக்கும் என்பது குழந்தைகள் மனதில் ஆழமாக பதியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...