பள்ளி பருவத்திலேயே புதிய கண்டுபிடிப்புகளுக்கான யுக்திகளும், எண்ணங்களும் தோன்ற வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள, அட்டல் இன்னோவேஷன் மிஷன் திட்டத்துக்கு, பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கல்லுாரிப் படிப்பை துவங்கும்போது தான் ஆராய்சிகளும், கண்டுபிடிப்புகளும் துவங்குகின்றன. இது மிகவும் தாமதம். அதற்கு முன்னதாக, பள்ளிப்பருவத்திலேயே கண்டுபிடிப்புகளுக்கான திறனும், ஆராய்ச்சி யுக்திகளும் மனதில் ஏற்பட வேண்டும்.
பள்ளிப்படிப்பை நிறைவு செய்து கல்லுாரி படிப்பிற்குள் நுழைவதற்கு முன்னதாவே, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த விஷயங்களை பள்ளி மாணவர்கள் கற்றுத்தேர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிப்பருவத்திலுள்ள மாணவர்களுக்காக அட்டல் இன்னோவேஷன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
ரூ. 20 லட்சம் நிதி
இத்திட்டத்தில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணைவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் புது வகையான ஆய்வகங்களை துவக்குவர். அதன் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் துவக்கி நிறைவு செய்வர்.
ஆராய்ச்சியின் வாயிலாக கிடைக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்படும். அதை பரிசீலனை செய்து அரசு புதிய திட்டமாக உருவாக்கி நடைமுறைப்படுத்தும். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு, முதல் கட்டமாக, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அடுத்த கட்டமாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
112 பள்ளிகளில்...
கோவை மாவட்டத்தில் உள்ள, 1,250 மேல்நிலை பள்ளிகளில், 112 பள்ளிகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டல் இன்னோவேஷன் இந்தியா மிஷன் (எய்ம்) திட்ட பயிற்றுனர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலரின் முயற்சியால் இதுவரை, அட்டல் இன்னோவேஷன் மிஷன் திட்டத்தில், அட்டல் டிங்கரிங் லேப் 112 பள்ளிகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
நிதியும் பெற்றுள்ளனர். இத்திட்டம் பெரும்பான்மையான பள்ளிகளில் துவங்கப்பட்டால் கண்டுபிடிப்பு யுக்திகளும், ஆராய்ச்சி மனப்பான்மையும் பள்ளி பருவத்திலேயே ஏற்படும். பெரும்பாலான பள்ளிகளில் துவங்குவதற்கான முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஸ்தரிப்பு
பள்ளி மாணவர்களை மேம்படுத்தும் இத்திட்டம், பரவலாக்கப்படும். அதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் என கோவை கலெக்டர் கிராந்தி குமார் கூறியுள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...