பெற்றோர் தங்கள் கனவு சுமையை, பிள்ளைகள் மீது சுமத்தாமல், அவர்கள் விரும்பும் பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி மற்றும் தனித்திறன் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும், 114 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், 114 பள்ளி ஆசிரியர்களுக்கு கேடயம்; உயர் கல்வி கற்க வெளிநாடு செல்லும் ஆறு மாணவர்களுக்கு விமான பயணச்சீட்டு, இலவச லேப்டாப்; சிலப்பதிகாரம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு மாணவியருக்கு தலா 5,000 ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை, அமைச்சர் மகேஷ் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், துறை ரீதியாக 77 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளும் திட்டத்தை துவக்கினோம். இன்று, 234வது தொகுதியாக, முதல்வரின் கொளத்துார் தொகுதியில் ஆய்வு செய்தோம்.
நம் நாட்டு துாதர்களை, வெளிநாடுகளுக்கு அனுப்புவதை போல், இங்குள்ள மாணவர்களையும், உயர் கல்வி பயில, வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நேருவின் கனவை, நம் முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.
ஆண்டுதோறும், 200 மாணவர்களை, மலேஷியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கனவு ஆசிரியர் திட்டத்தின் வாயிலாக, 55க்கும் அதிகமான ஆசிரியர்களை, பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளோம்.
மாணவர்கள் படிப்பது மட்டுமின்றி, தனித்திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் தங்கள் கனவு சுமையை, பிள்ளைகள் மீது சுமத்தாமல், அவர்கள் விரும்பும் பாதையில் செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...