பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் விளக்கத்துடன் இடம்பெற்று தேர்வில், 15 முதல் 20 மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. நல்லொழுக்கத்தின் விதை விதைக்கப்பட்டு உள்ளது என, உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டியுள்ளது.
மதுரை ராம்குமார் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு:
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலை உள்ளடக்கிய அதிகாரங்களை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை விரிவாக கற்பிக்கும் வகையில், பாடத்திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் 2016ல் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் தமிழக அரசு, 2017ல் அரசாணை பிறப்பித்தது. எனினும், அதை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த மனுவை, 2022 டிசம்பர், 12ல் விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன், அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் தேர்வுகளில் திருக்குறளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு, 15 முதல், 20 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்:
உலகில் நீதித்துறை, நிர்வாகம் பெரும்பாலும் இணையான பாதையில் செல்கின்றன. இரு துாண்களும் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன. நிர்வாகத்தின் இரு பிரிவுகளும் இணைந்து செயல்படுவதால், தமிழக கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், நன்னெறிக் கல்வி முறை பொதிந்துள்ளது. பாடத்திட்டத்தில் நல்லொழுக்கத்தின் விதை விதைக்கப்பட்டிருப்பதை, இந்த நீதிமன்றம் அங்கீகரிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...