இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார்.
ஆனால், இன்று ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 19 ஆண்டு முதல்வர் பொறுப்பில், 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்.
ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தனர். அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மிஸ் செய்ய வைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை, அதிமுக அரசு ரத்து செய்தது. அனைத்தையும் 2006-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீ்ணடும் நடைமுறைப்படுத்தினார்.
அரசு ஊழியர் நியமனத் தடைச் சட்டம், "டெஸ்மா" சட்டம் ரத்து செய்யப்பட்டன. 1996-ல், அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டது.
அதேவழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார். மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் என்பது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
கடும் நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறார். அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும்.
பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
சமக்ர சிக்சா அபியான் திட்டத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காத நிலையிலும் 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளது திமுக அரசு. பழனிசாமியின் நாடகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்படடுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...