பெண் குழந்தைகளுக்கு நிகராக, ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, ஆய்வுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, சென்னை எழும்பூர் டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
இதை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
பின், அவர் பேசியதாவது:
குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு குறித்து, என்.எஸ்.எஸ்., மூலம் இதுவரை, 1,723 முகாம்களை நடத்தி உள்ளோம். அதன் வாயிலாக, 8,615 ஆசிரியர்களுக்கும், 86,186 மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.
பாலியல் துன்புறுத்தல்கள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் நடப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தினந்தோறும் வெளியாகும் பத்திரிகை செய்திகளை படித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர, யாரும் பயப்படத் தேவை இல்லை.
இன்றைய கருத்தரங்கில் பேசப்படும் கருத்துகள் அடிப்படையில், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு நண்பனை போல இருந்து எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, விரைவில் குறும்படம் வெளியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி பேசியதாவது:
கடந்த 2012 முதல், போக்சோ சட்டம் இருந்தாலும், அதுகுறித்த விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. அதை விளக்கவே, ஒவ்வொரு ஆண்டும் கருத்தரங்குகளை நடத்துகிறோம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவோர் தைரியமாக வெளிப்படுத்தினால் கூட, கேட்பவர்கள் மூடி மறைக்க நினைக்கின்றனர்.
அப்படித்தான், கிருஷ்ணகிரியில் பாதிக்கப்பட்ட குழந்தை வெளியில் சொல்லத் துணிந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், வெளியில் சொன்னால், உனக்கு கெட்ட பெயர் வந்து விடும் என்று கூறி தடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், காவல் துறை துணை கமிஷனர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...