திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில், நரிக்குறவர் இனத்தை சேர்ந்த, 140 குடும்பங்கள் வசிக்கின்றன.
வாழ்வாதாரத்துக்கு வழியில்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என, இப்பகுதி மக்கள் கூறியிருந்தனர். இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியாகி இருந்தது.
இதையடுத்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், தாசில்தார் ஜீவா, பி.டி.ஓ., கனகராஜ் நேற்று அங்கு சென்றனர். 'காலை உணவு, மதிய உணவு, உதவித்தொகை, சீருடை என, எத்தனையோ சலுகைகள், திட்டங்களை தமிழக அரசு வழங்குகிறது.
குழந்தைகளை படிக்க வைப்பதை விட்டு, இப்படி வீட்டிலேயே வைத்திருப்பது நியாயம் தானா என கேள்வி எழுப்பினர்.
பொதுமக்கள் கூறுகையில், யாரும் வேலை தருவதில்லை. வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் ஊசி - பாசி விற்று வருகிறோம். பட்டா இல்லாமல், தற்காலிக கூரை அமைத்து வாழ்கிறோம்.
ஆட்சியாளர்கள் - அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனு பலமுறை அளித்துள்ளோம். வாழ்வாதாரத்துக்கு ஏதாவது செய்து கொடுத்தால் தான், நாங்களும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றனர்.
அதிகாரிகள், அரசின் சலுகைகளை பயன்படுத்தி, குழந்தைகளை முதலில் படிக்க வையுங்கள். குழந்தைகள் பள்ளி செல்வதற்கான வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதையடுத்து, அதிகாரிகள் வந்த வாகனங்களிலேயே, அந்த குழந்தைகள் பள்ளிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...