ஜாதி, மொழி, இனம், மத அடிப்படையில், மக்களை பிளவுப்படுத்துகின்றனர். ஜாதி அடையாளத்தை காண்பிக்க, இன்றும் கயிறு கட்டும் பழக்கம் இருப்பது வேதனை அளிக்கிறது என கவர்னர் ரவி தெரிவித்தார்.
நம்நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினவிழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
நம் நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் மக்கள் வாழ்ந்தாலும், மாநிலங்கள் உருவான தினத்தை கொண்டாடும் போது, அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்த தினத்தை, அந்தந்த மாநில அரசுகள், கலாசார நிகழ்வுகள் நடத்திக் கொண்டாடி வந்தன. பிரதமர் மோடி, நாடு முழுதும் கொண்டாட வேண்டும் என்றார்.
அதன்படி, இன்று நாட்டில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. மாநிலங்கள் உருவான தினத்தை, ராணுவ வீரர்களும் பெருமையாக கொண்டாடுகின்றனர்.
நம் பாரதம் ரிஷிகள், குருக்கள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சூழலிலும், மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். பழைய பாரத நாட்டில், பிரிவினை என்பது கிடையாது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பாகுபாடும் கிடையாது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தான், இங்கு பிரிவினை தோன்றியது. சிறந்த நிர்வாகத்திற்காகவே மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அரசியல் காரணங்களுக்காக, ஜாதி, மொழி, இனம், மத அடிப்படையில், இங்குள்ள மக்களை பிளவுப்படுத்துகின்றனர்.
ஜாதி அடையாளத்தை காண்பிக்க, கயிறு கட்டும் பழக்கம் இன்றும் இருப்பது வேதனை அளிக்கிறது. நாட்டில் ஒரே மண்ணில் வசிக்கும் மக்களுக்கு, பிரிவினை என்பது எதற்கு. பாரதம் ஒரே கலாசாரம் உடைய நாடல்ல. இங்கு பல்வேறு கலாசாரங்கள் உள்ளன. மாநில மற்றும் உள்ளூர் கலாசாரத்தை நாம் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ராணுவ தக் ஷின் பாரத் பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங், எழுத்தாளர் கரியாளி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...