கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மாணவர் எண்ணிக்கை குறைந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு துவக்க பள்ளிகளை ஒன்றிணைக்கும் முயற்சி நடந்தது. இதற்கு அப்போது தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த திட்டத்தை தற்போதைய தி.மு.க., ஆட்சியில் கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
இதற்கு ஏற்ப இன்று (நவ.,8) சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக அமைச்சர் மகேஷ் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த செயலாளர், இயக்குநர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இத்துறைக்கு தேவையான புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு பள்ளிகள் இணைப்பு திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தேர்தலில் அளித்த கல்வித்துறை தொடர்பான வாக்குறுதிகள் பெரும்பாலும் கிடப்பில் போட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான பள்ளிகள் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஆசிரியர்களை மேலும் அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சென்னையில் நடந்த முன்ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகள் இணைப்பு திட்டத்தால் ரூ.பல கோடி சம்பள இழப்பு தவிர்க்கப்படும் உள்ளிட்ட யோசனைகளை அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். இத்திட்டத்திற்கு அதிகாரிகளே ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே காலியாக உள்ள தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அவர்கள் திட்டமிடுகின்றனர்.
முதல்வர் இத்திட்டத்தை ஏற்க கூடாது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். பள்ளிகள் மேம்பாட்டிற்கு ரூ.பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசு, அங்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையும் மீறி பள்ளி இணைப்புக்கு நடவடிக்கை எடுத்தால் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட தயாராகும், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...