உயர்கல்வி பாடத்திட்டங்களை வடிவமைப்பதில், தொழிற்துறை நிபுணர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என, சி.ஐ.ஐ., உயர்கல்வி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில், 8வது தேசிய உயர்கல்வி மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது.
உயர்கல்வித் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கின் துவக்க விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் பேசுகையில், வெறும் பட்டப்படிப்பு என்பதைத் தாண்டி, திறன்கள் தேவைப்படும் காலமிது. தொழில்துறை நொடிக்கு நொடி மாறி வரும் சூழலில், உயர்கல்வியும் அதற்கேற்ப அமைய வேண்டும். கல்வி நிறுவனங்கள் கூடுதல் சுறுசுறுப்பைக் காட்ட வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் தொழில்துறைக்கான நிபுணர்களின் தேவை வேறு விதமாக இருக்கும். புதிய கற்பித்தல் முறைகள் தேவை. டிஜிட்டல் மயமான, அறிவுசார்ந்த, புத்தாக்கமான கல்விச்சூழல் காலத்தின் தேவை என்றார்.
காக்னிஸன்ட் இந்தியா, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் வாரியர் பேசியதாவது:
படிப்பு முடித்து வரும் மாணவர்கள் தொழில்துறைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்பவர்களாக இல்லை. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்ட வடிவமைப்பில், தொழில்சார் நிபுணர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் திட்டங்கள், தொழிற்துறைக்குத் தேவையான திறன்கொண்ட மாணவர்கள் என்ற இலக்கை எட்ட மிக நல்ல வழி. தொழில்துறை நிபுணர்கள், கல்லூரிகளில் கவுரவ பேராசிரியர்களாக, விரிவுரை வழங்கவும், பயிலரங்குகள் நடத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழக உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் கோபால், உயர்கல்வியில் தொழில்நுட்ப எழுச்சியின் போக்கு ஆய்வறிக்கையை வெளியிட, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி பெற்றுக் கொண்டார்.
கோபால் பேசுகையில், அனைவருக்கும் கல்வி என்ற தமிழக அரசின் இலக்கை நோக்கி செயல்படுவதற்கு, உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் சுமார் 50 சதவீதமாக இருப்பதே சாட்சி. மாணவர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களின் போட்டித் தன்மையை அதிகரிக்க நான் முதல்வன், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நிரல் திருவிழா, தொழில்துறை 4.0, முதல்வர் ஆராய்ச்சி நிதி என, ஏராளமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார்.
சி.ஐ.ஐ., தென்மண்டல தலைவர் நந்தினி, ஆர்.வி.எஸ்., குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் செந்தில் கணேஷ், சி.ஐ.ஐ., கோவை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...