தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெருமூச்சு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று மாணவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்விகள் கேட்டும், மாணவர்களை புத்தகம் வாசிக்க செய்தும் அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இதனையடுத்து, மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்கள், திருக்குறள் சொல்லிக் காண்பித்து, அமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, பள்ளியில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் பள்ளி வளாகம், கழிவறை தூய்மை ஆகியவற்றையும் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் எலிசபெத் மற்றும் ஆசிரியர்களுக்கும் பள்ளியை திறம்பட நடத்தி வருவதாக கூறி பாராட்டுகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியது: ''அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட, அரசுத் தேர்வாணையம் மூலமாக நடத்திய தேர்வில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும். தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை மட்டுமின்றி புதியதாக பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் தேவைகளும் அதிகரித்து வருகிறது.
மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு முரணாக மத்திய அரசு விதிகளை தெரிவித்து வருகிறது. அதன்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும். 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றினால் தான் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் என்கிறார்கள். ஆனால், நமது முதல்வர் மாநிலத்தின் கொள்கை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. மாநில நிதியை வைத்தே பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்'' என்று அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...