ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால், தங்கத்தின் தேவை அதிகரிக்கத் துவங்கியுள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், தரவு மையங்கள் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது இதற்கு வழிவகுத்துள்ளது.
இன்றியமையாதது
மின்னணுவியல் துறையில் தங்கத்தின் தேவை கடந்த 2010ம் ஆண்டு 328 டன் என்ற உச்சத்தை எட்டியது.
இதன் பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தேவை, கடந்த ஆண்டு 249 டன் என்ற நிலையை எட்டியது. இதனிடையே, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தங்கத்தின் தேவை இன்றியமையாததாகி உள்ளதால், கடந்த சில காலாண்டுகளாக அதன் தேவை மீளத் துவங்கியுள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
பொதுவாகவே, தங்கம் சிறப்பான மின் கடத்தியாகவும்; வெகு விரைவாக அரிக்கப்படாமலும் இருக்கும்.
ஸ்மார்ட் போன்களுக்கு தேவையான அதிவேக தரவு செயலாக்கம், குறைந்தபட்ச ஆற்றல் இழப்பு மற்றும் நீண்ட கால செயல்திறன் ஆகியவற்றை வழங்குவதால், தங்கத்தின் பயன்பாடு இன்றியமையாததாகிறது.
சுகாதாரம், நிதித் துறைகள், புத்தாக்கம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் அதிகம் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் தேவை மேலும் அதிகரித்து உள்ளது.
சவால்
செயலிகள் முதல் சென்சார்கள் வரை ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், தங்கம் ஒரு முக்கியமான பொருளாக உள்ளது.
ஏ.ஐ., மட்டுமல்லாது பல துறைகளிலும் தங்கத்துக்கு தேவை உள்ளது. மருத்துவமனைகளில், சிகிச்சை சாதனங்களிலும்; நோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை மருந்து வினியோகத்துக்கும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும், துாய்மை எரிசக்தி தொழில்நுட்பங்களில், ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் கார்பன் டை ஆக்சைடு மாற்றம் போன்ற செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே, அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெறும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதே போன்ற சிக்கல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தபோது, வெள்ளி மற்றும் தாமிரத்தை கொண்டு சமாளித்த நிலையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு பயன்படுத்த மாற்றுப் பொருளே இல்லாதது சிரமமாக உள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...