சமீபகாலமாக அனைத்து துறையினராலும் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தகைகளில் ஒன்றும், வரும்காலங்களில் எவராலும் தவிர்க்க முடியாத தொழில்நுட்பமும் எது என்று கேள்விக்கு ஒரே பதில் 'ஏ.ஐ.,' எனும் 'செயற்கை நுண்ணறிவு'!
முன்பு அறிவியல் புனைகதைகளில் மட்டுமே இருந்த பல கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள், இன்று யதார்த்த உலகிலும் காலடி எடுத்து வைக்கின்றன. மனிதர்களைப் போலவே சிந்திக்கவும், செயல்படவும் வடிவமைக்கப்பட்ட 'செயற்கை நுண்ணறிவு', பொறியியல், மென்பொருள் மேம்பாடு, மருத்துவம், விவசாயம், கல்வி என அனைத்து துறைகளிலும் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
வல்லமை பெறும்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஐ., குறித்த கட்டமைப்பில் ஈடுபடுகையில், உலகம் முழுவதும் இவ்வளவு விரைவாக, இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், மக்கள் ஜி.பி.டி.,யை தீவிரமாக பயன்படுத்துவதை காண முடிகிறது. மேலும், கணினிக்கு ஒரு புதிய பயன்பாட்டை இது உருவாக்கியுள்ளது.
தற்போது, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் மட்டும் அளிக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம், விரைவில் செயல்களையும் நேரடியாக செய்யும் வல்லமை பெறும். கற்றல், பகுத்தறிதல், சிக்கலுக்கு தீர்வு காணுதல், உணர்தல் மற்றும் மொழிப் புரிதல் ஆகிய திறன்களை உள்ளடக்கிய ஏ.ஐ., பாதுகாப்பான முறையில் செயல்படுவதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறோம். இதனை மென்மேலும் மேம்படுத்தும் அதேதருணம், அனைத்து தரப்பினராலும் சுமூகமாக பயன்படுத்தப்படும் ஒன்றாக தொடர்ந்து நீடிப்பதிலும் உரிய கவனம் செலுத்தப்படுகிறது.
வளர்ச்சியில் பங்கு
மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு வல்லுனர்களுக்கும் தேவை மிகுந்த இன்றைய உலகில், அத்தகைய தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அனைத்து துறை வல்லுனர்களுக்கும் அவர்களது பணியை மென்மேலும் சிறப்பாக செயலாற்ற உறுதுணையாகவும் ஏ.ஐ., திகழும்.
பொதுமக்களின் பல்வேறு தேவைகளுக்கும் இது பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல புதிய தொழில் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தொழில்முனைவோர்க்கான பிரதான ஆதராமாகவும் ஏ.ஐ., உருவெடுத்துள்ளது. அவர்கள் இதற்கான சந்தையையும், தேவையையும், இடைவெளிகளையும் புரிந்துகொண்டு, புதுமையான தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள். இத்தகைய செயல்பாடுகளால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் ஏ.ஐ., ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
இந்தியா போன்ற பல மொழிகள் பேசப்படும் நாடுகளிலும், அனைத்து மொழித்தன்மையையும் உணர்ந்து உடனடியாக செயலாற்றும் தன்மை ஏ.ஐ.,யால் சாத்தியம். இதன் வளர்ச்சியில், தொழில்நுட்ப வல்லுநர்கள், மென்பொருள் வடிவமைப்பாளர்கள் பலரும் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், ஏ.ஐ., விரைவில் மென்மேலும் உயரிய இடத்தை பெறும் என்று நம்புகிறேன்.
-ஸ்ரீநிவாஸ் நாராயண், துணைத் தலைவர், ஓபன் ஏ.ஐ.,
மனித வளத்தை என்ன செய்வது? மனித வளம் பயன்படுத்தாமல் வீணாக போய்விடும். மனித இனத்தை முழுவதும் தொழில்நுட்பம் ஆள போகிறது. இது அழிவை நோக்கிய அசுரவேக பயணம்.
ReplyDelete