தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், பரவலாக மழை இன்னும் தீவிரம் அடையவில்லை. அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் தாமதமான தீவிர சூறாவளி புயல்கள், இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாதது போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
வருகிற 20-ந் தேதிக்கு பிறகு கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடலுக்கு சாதகமாக அமையும் என்பதால், இம்மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதி வரை அடுத்தடுத்த புயல் சின்னங்களை வங்கக்கடலில் உருவாக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும், வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மழையை கொடுக்கவில்லை என்றாலும், நேற்று முன்தினம் முதல் கிழக்கு திசை காற்றினால் தமிழகத்தில் மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதிலும் தென், மேற்கு, டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும் எனவும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்றுடன் மழை விலகும் எனவும், அதன் பின்னர், நாளை (திங்கட்கிழமை) கடலூர் உள்ளிட்ட சில பகுதிகளிலும், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) டெல்டா, மேற்கு மாவட்டங்களிலும் மழை விலகும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
மேலும் அவர், 'சென்னையில் இன்று இரவில் இருந்தும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக வருகிற 20-ந் தேதியில் இருந்தும் பருவமழை குறைந்து பனிப்பொழிவு தொடங்கும். அதன் தொடர்ச்சியாக வருகிற 23 (சனிக்கிழமை) அல்லது 24 (ஞாயிற்றுக்கிழமை)-ந் தேதிகளில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறலாம். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் என்றும்' கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...