குருப்- சி மற்றும் குருப்-பி (அரசுப்பதிவு அல்லாத) பதவிகளில் நேரடி ஆட்சேர்ப்பு தேர்வை முறைப்படுத்த குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் பொது ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை தலைவர்களின் கருத்து கேட்புக் கூட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர், அனைத்து துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதுச்சேரி அரசு, பல்வேறு துறைகளில் உள்ள குரூப் சி மற்றும் குருப் பி (அரசுப் பதிவு அல்லாத) பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் தேர்வு பிரிவு நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகளை சம்மந்தப்பட்ட துறைகள் வெளியிடுகின்றன. மேலும், தேர்வுகளின் முறை மற்றும் பாடத்திட்டமும் சம்மந்தப்பட்ட துறைகளால் பரிந்துரைக்கப்படுகிறது.
இது குறுகிய இடைவெளியில் பல தேர்வுகளுக்கு வழிவகுக்கிறது. சில சமயங்களில், அடிப்படை தகுதிகள் ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், தனித்தனி தேர்வுகள் நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
அதனால், குருப்-சி மற்றும் குருப்- பி (அரசுப்பதிவு அல்லாத) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தேர்வின் செயல்முறையை முறைப்படுத்த அடிப்படை கல்வித்தகுதி அடிப்படையில் பொது ஆட்சேர்ப்பு தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது ஆட்சேர்ப்பு தேர்வுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்து கேடர் கட்டுப்பாட்டு அதிகாரிகளும், ஒவ்வொரு நிலைக்கும் பாடத்திட்டம் உட்பட தேர்வு வரைவு திட்டத்தை ஆய்வு செய்து அரசுக்கு சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவை உறுதி செய்யும் வகையில், உத்தேச தேர்வுத் திட்டம் குறித்த கருத்து மற்றும் ஆலோசனைகள் வழங்க அறிவுருத்தப்பட்டுள்ளது.
தேர்வின் வரைவுத் திட்டம்:
ஆட்சேர்ப்பு தேர்வுகள் குழுவாக நடத்தப்படும். அடிப்படை தகுதிகளை பொறுத்து பதவிகள். அதாவது 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு ஆகிய மூன்று பிரிவாகவும், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு பொதுவான தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் கொள் குறி வகை வினா (அப்செக்டியூவ்) முறையில் நடத்தப்படும். தேர்வு நேரம் 2 மணி நேரம்.
இதே கல்வித்தகுதியில் தொழில் நுட்பப் பிரிவு பணி என்றால், பொது முதல் தாள் தேர்வுடன் இரண்டாம் தாள் தேர்வு தனியாக நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு திட்டத்தை முறைப்படுத்துவதற்கான அனைத்து துறை தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ம் தேதி மாலை 4:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், தேர்வுக் கட்டுப்பாட்டாளரான அரசு செயலர் பங்கஜ்குமார் ஜா தலைமையில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனைகளை கொண்டு, வரைவு திட்டத்தில் உரிய திருத்தங்களை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அரசு அதனை பரிசீலித்து அரசாணை வெளியிட்ட பின் வரும் நிதி ஆண்டில் இருந்து பொது ஆட்சேர்ப்பு தேர்வு முறையை அமல்படுத்தப்பட உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...