வடமாநிலங்களில், கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற்று, சைபர் குற்றவாளிகளாக மாறிய நபர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து, மோசடியில் ஈடுபட வேலைக்கு அமர்த்தியதாக, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சமீபத்தில், சேலத்தைச் சேர்ந்த ஜவுளி வர்த்தகரை, ஆன்லைன் வாயிலாக, டிஜிட்டல் அரெஸ்ட் செய்து மோசடி செய்த, ராஜஸ்தானைச் சேர்ந்த பர்தீப் சிங், 24; சண்டிகரை சேர்ந்த யஷ்தீப் சிங், 24, ஆகியோரை, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அதில், பர்தீப் சிங் என்பவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்:
நாங்கள் எப்படி சைபர் குற்றங்களில் ஈடுபட வேண்டும் என, வங்கதேசத்தில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படும். வடமாநிலங்களில் வேலை தேடும் பட்டதாரிகளை, சைபர் குற்றவாளிகளாக மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி பட்டதாரிகளுக்கு வலை விரித்தோம். அவர்களுக்கு போதிய திறமை இல்லை; மோசடி செய்ய திணறினர். அவர்களுக்கு பயிற்சியும் தேவைப்பட்டது. இதனால், கோச்சிங் சென்டர் நடத்தி பட்டதாரிகளை சைபர் குற்றவாளிகளாக மாற்றி வந்தோம்.
எங்களை போன்று பலரும் கோச்சிங் சென்டர் துவங்கினர். அவற்றில், பயிற்சி முடித்தோருக்கு உடனடி வேலை என்பதால், பட்டதாரிகள் அதிகம் பேர் சைபர் குற்றவாளிகளாக மாறினர். அவர்களுக்கு மாதம், 25,000 ரூபாயில் இருந்து, அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து, வேலைக்கு அமர்த்தினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...