ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தப்பட்ட சலுகை விவரங்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: ஜேஇஇ தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை சுயமாக தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது அதற்கான தேர்வுக் குழுவை அணுக வேண்டும்.
எனினும், தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தேர்வர்கள், உதவியாளரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் அந்த உதவியாளர் தகுதியானவரா, இல்லையா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இதேபோல், மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் கூடுதல் நேரம் என்ற வார்த்தை இனி இழப்பீட்டு நேரம் என மாற்றப்பட வேண்டும். உதவியாளர்களை கொண்டு தேர்வை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு இழப்பீட்டு நேரமானது 20 நிமிடங்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது.
மேலும், கண் தெரியாதவர்கள், இரு கைகளும் பாதிக்கப்பட்டவர்கள், பெரு மூளைவாதம் ஆகியவற்றில் குறைபாடுள்ளவர்களுக்கு 3 மணி நேர தேர்வுக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் இழப்பீட்டு நேரம் அனுமதிக்கலாம். தேர்வின் காலம் ஒரு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால், அதற்கேற்ற விகித அடிப்படையில் இழப்பீட்டு நேரத்தை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...