தீபாவளி பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாதுகாப்பு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது பெரியவர்களின் மேற்பார்வையின்
கீழ் குழந்தைகள் பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,
திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளை வெடிக்க
தீப்பெட்டிகள், லைட்டர்கள் போன்ற நேரடி நெருப்புகள் பயன்படுத்துவதை
தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ள நீண்ட மற்றும் தளர்வான ஆடைகளை
அணிவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், மின் கம்பங்கள் மற்றும்
கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும், சுவாசப்பிரச்னை
உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்,
பட்டாசுகளை பாதுகாப்பான இடைவெளியில் நின்று வெடிக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெருப்பு ஏற்பட்டால் தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பட்டாசு கொளுத்தும்போது பாதணிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்றும்,
பட்டாசுகளைக் கையாளும் ஒவ்வொரு முறையும் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக்
கழுவ வேண்டும் என்றும், ஆரம்ப சுகாதார மையங்கள், துணை மாவட்ட
மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைகள் உட்பட அனைத்திலும் தீக்காயங்கள் மற்றும் IV திரவங்களுக்கு
தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை, அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களும்,
பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை
அறிவுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...