அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.16-ம்தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2,187 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் தரவரிசை பட்டியல் செப்.30-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விரும்பும்கல்லூரியை தேர்வு செய்வதற்கான நேரடி கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் அக்.14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான காலஅட்டவணையும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு பிஎட் கலந்தாய்வு சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளன்று காலை முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியின மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு நடந்தது. தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் (திட்டம் மற்றும் மேம்பாடு) ஆர்.ராவணன், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான டி.எஸ்.சுபாஷினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிற்பகலில் பொறியியல், வரலாறு பாடப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இக்கலந்தாய்வின்போது கல்லூரியை தேர்வு செய்த மாணவர்களுக்கு உடனடியாக கல்லூரிஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. கலந்தாய்வு 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்.23-ம் தேதி தொடங்குகிறது.
தள்ளிவைப்பு: இன்று காலை தாவரவியல், விலங்கியல் பாடப்பிரி வினருக்கும், மதியம் வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவினருக்கும் (மாணவர்கள் மட்டும்) கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிகல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை லேடிவெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (இன்று)நடைபெற இருந்த பிஎட் கலந்தாய்வு கனமழை காரணமாக தள்ளிவைக்கப்படுகிறது. அந்த கலந்தாய்வு அக்டோபர் 21-ம்தேதி நடைபெறும்’ என தெரிவித்துள்ளார.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...