கல்விக்கு அரசு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை: கல்விக்கு திராவிட மாடல் அரசு செய்தது என்ன என்று கண்மூடி கேட்பவர்களுக்கு, அகில இந்திய தொழில் தேர்வுகளில், 29 மாணவ, மாணவியர் முதலிடம் பெற்றதே பதில் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, அரசு சார்பில் 2,877 கோடி ரூபாய் செலவில், தமிழகத்தில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
கடந்த 2023 - 24ம் கல்வியாண்டிற்கான, தேசிய தொழில் தேர்வுகள், ஆக., 12 முதல் செப்., 9 வரை நடந்தன. இதில், தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்த, 45,333 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், 41,591 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, தேசிய அளவில் முதலிடம் பிடித்த, 29 தமிழக மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் நேற்று பாராட்டினார். அமைச்சர் கணேசன், தலைமைச் செயலர் முருகானந்தம் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
கல்விக்கு திராவிட மாடல் அரசு செய்தது என்ன என்று கண்மூடி கேட்பவர்களுக்கு, நாம் ஆட்சி பொறுப்பேற்ற பின், அரசு ஐ.டி.ஐ.,க்களை தரம் உயர்த்த, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து, பயணத்தை துவக்கினோம்.
இன்று அகில இந்திய தொழிற் தேர்வுகளில் முதலிடம் பெற்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த, 29 மாணவ -- மாணவியரையும், ஒரு பயிற்றுனரையும் பார்த்த போது, பெருமிதத்தால் பூரித்து போனேன்.
இதில், பெரும்பாலானோர் மாணவியர் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த புகைப்படங்களே, திராவிட மாடலை கேள்வி எழுப்பும் அந்த வீணர்களுக்கான பதிலடி.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...