இந்தியாவில் தற்போதைய நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் படிப்பவர்கள் முதல் நான்கரை ஆண்டுகள் முடிந்த பின்னர், இறுதி தேர்வு எழுதிவிட்டு, ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றிய பிறகு, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவ சேவை ஆற்றுகின்றனர். நீட் தேர்வு எழுதி முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருகின்றனர்.
அதேபோல், வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள், ஓராண்டுபயிற்சி மருத்துவராக பணியாற்றவும், நீட் தேர்வு எழுதி முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவ சேவை ஆற்றவும், எப்எம்ஜிஇ என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில், இந்த நடைமுறையை மாற்றி, எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தது.
இதுதொடர்பான ஆணையத்தின் அறிவிப்பில், “மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட எம்பிபிஎஸ் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்த பின்னர் நெக்ஸ்நிலை-1 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும். பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்றிய பிறகு, நெக்ஸ்ட் நிலை-2 தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவ சேவை ஆற்றவும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரவும் முடியும். அதேபோல், வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்களும் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும்.
இந்த நெக்ஸ்ட் தொடர்பாக துறை சார்ந்தவர்களின் கருத்துகளை தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுப்பெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தேர்வு முறையால் மாணவர்களின் பயிற்சி திறன் பாதிக்கப்படும் என்பதால் அத்திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, நெக்ஸ்ட்தேர்வு நடைமுறை மறுஉத்தரவுவரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான எம்பிபிஎஸ் பாடத்திட்ட வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை
கல்வி வாரிய இயக்குநர் சாம்பு சரண்குமார் வெளியிட்டுள் ளார். அதன் விவரம்: அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற நோக்கத்தின் கீழ் இந்திய மருத்துவ பட்டதாரிகளின் திறன், கல்வி, ஞானம், ஆற்றல், பயிற்சி ஆகியவற்றை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வதே மருத்துவக் கல்வியின் இலக்கு ஆகும். அதன்படி, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேர்வுகளில் பங்கேற்க முடியும். சில நேரங்களில் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அவர்களுக்கு அதில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. முக்கிய காரணங்களுக்கான சலுகைகளை பெறுவதற்கும் நடப்பாண்டு முதல் குறைந்தபட்சம் 60 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும்.
எம்பிபிஎஸ் படிப்பில் முதலாமாண்டில் 3 மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டுநரை (மென்ட்டார்) நியமிக்க வேண்டும். குறிப்பாக துறைத் தலைவர், பேராசிரியர், உதவிப் பேராசிரியர் நிலையில் இருப்பவர்களை அந்தபொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அவர்கள், மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், திறனை மேம்படுத்தவும் பக்கபலமாக இருக்க வேண்டும். நான்குஆண்டுகளுக்குப் பிறகு பயிற்சி மருத்துவர்களாக அவர்கள் பணியாற்றும் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அதேபோல் நெக்ஸ்ட் தேர்வினை எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தின் 54-வது மாதத்தில் (2024-2025) நடத்தி முடிக்க வேண்டும்.அதன் பின்னர், பயிற்சி மருத்துவர் பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலத்துடன் இணைந்து இரு மொழிக்கல்வியாக அதனை கற்பிக்கவும், கற்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ், இந்தி, அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...