பிரின்ஸ் கஜேந்திரபாபு
Vikatan News
தற்போது நடைமுறையிலிருக்கும் மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்பதைக் கைவிடுவதாகத் தமிழக அரசு அறிவித்து, அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆகியவற்றில் சமமான கற்றல் வாய்ப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மகாவிஷ்ணு விவகாரம், தொடர் சர்ச்சைகள் எனச் சிக்கித் தவிக்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இதற்கான காரணங்கள் என்னென்ன, அவற்றை அரசு எப்படிக் களையவேண்டும் என்பது குறித்து எழுதுகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் மகா விஷ்ணு விவகாரம் போன்ற பல பிரச்னைகள் நிலவி வருவதற்குக் காரணம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியா, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனா என்பது பிரச்னை அல்ல. பள்ளிக்கல்வித்துறைக்கு யார் அமைச்சராக இருக்கிறார் என்பதைக் காட்டிலும், பள்ளிகளில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்னென்ன என்பதுதான் முக்கியமானது.
மோடி அரசு வந்த பிறகு, அரசு அதிகாரிகளை மத்திய அரசு எப்படி அணுகுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால்தான், கல்வித்துறையில் ஏன் இவ்வளவு சிக்கல்கள் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். மத்திய அரசு என்ன நினைக்கிறதோ, அதைச் செய்யக்கூடிய தூதர்களாக மாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்க வேண்டுமென்று மத்திய அரசு நினைக்கிறது. அதற்கான வேலைகளை, 2017-லிருந்தே மிகச் சிறப்பாகச் செய்யத் தொடங்கிவிட்டார்கள் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.
குறிப்பாக, தமிழகத்தில் இரு பெரும் ஆளுமைகளான கலைஞர் கருணாநிதியும், செல்வி ஜெயலலிதாவும் மறைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. அப்போது, ஆட்சி நிர்வாகத்தை அதிகாரிகள் மூலம் அதிவேகமாகக் கொண்டுபோவதற்கான முயற்சி நடைபெற்றது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில், ஒவ்வொரு நாளும் திடீர் திடீரென அறிவிப்புகள் வெளியாகும். உடனே அதற்கு எதிர்ப்புக் கிளம்பும், போராட்டமும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, அன்றைய தினமே அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்படும். இந்தக் காட்சிகளைக் கடந்த ஆட்சியில் தொடர்ச்சியாகப் பார்த்துவந்தோம்.
உதாரணமாக, தேசியக் கல்விக் கொள்கை வரைவு வெளியான காலகட்டத்தில், தமிழகத்தில் 5-ம் வகுப்புக்கும், 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும், அந்த அரசாணையை உடனே நிறுத்திவைத்தார்கள். இப்படியாக, பல அறிவிப்புகள் அப்போது நிறுத்திவைக்கப்பட்டன அல்லது வாபஸ் பெறப்பட்டன. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒரு ஜனநாயகம் இருந்தது என்று பார்க்கலாம்.
ஆனால், 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்கிற அளவுக்குச் சூழல் உருவாகிவிட்டது. பெரும்பாலான கட்சிகள் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ‘இப்போதுதான் ஆட்சி அமைத்திருக்கிறது. எனவே, கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம்’ என்று அரசியல் கட்சிகளும், செயற்பாட்டாளர்களும் அரசுக்கு ஒத்துழைக்கும் நிலையிருந்தது. அந்த வகையில், தி.மு.க அரசுக்கு அது ஒரு ‘கோல்டன் பீரியட்’ என்றே சொல்லலாம். அந்த வாய்ப்பை தி.மு.க அரசு உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டதா என்பது பெரும் கேள்வி.
பள்ளிக்கல்வித்துறையில் அரசு அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே அரசைத் தவறாக வழிநடத்தி வந்திருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்கது. ‘சமக்ர சிக்ஷா’ திட்டம் குறித்து இன்றைக்குப் பெரும் விவாதம் நடைபெற்றுவருகிறது. ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டம் என்பது ஒருங்கிணைந்த பள்ளி. அதாவது, அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார்ப் பள்ளி என்று எல்லா பள்ளிகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பது. தொடக்கக் கல்வியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரைக்கும், பள்ளிக் கல்வியை முழுமையாக ஒருங்கிணைக்கும் திட்டம்.
இந்தத் திட்டம் குறித்து தேசியக் கல்விக் கொள்கையில் பேசப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ‘ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ்’ (தகைசால் பள்ளி), ‘பள்ளி வளாகம்’ என்றெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. அதாவது 10 கி.மீ முதல் 20 கி.மீ வரையிலான தொலைவில் அமைந்திருக்கும் பலவீனமான பள்ளிகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அதை ‘பள்ளி வளாகம்’ என்று மாற்ற வேண்டும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை. ‘தகைசால் பள்ளி’யாக ஒரு பள்ளியை அடையாளம் கண்டுகொண்டுவிட்டால், அதைச் சுற்றியிருக்கும் பிற பள்ளிகளுக்கெல்லாம் ஒரு தலைமைப் பள்ளியாக இது இருக்கும். அப்படியான தகைசால் பள்ளியில் ஒன்றுதான் அசோக் நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி.
இது தலைமைப் பள்ளியாக இருந்து மற்ற பள்ளிகளை வழிநடத்தும். தலைமைப் பள்ளியில் இருக்கும் வளங்கள் மற்ற பள்ளிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். வளங்கள் என்பது ஆசிரியர்களாக இருக்கலாம், ஆய்வக உபகரணங்களாக இருக்கலாம், விளையாட்டுக் கருவிகளாகவும் இருக்கலாம். ஓர் ஆசிரியர் திங்கள் கிழமை ஒரு பள்ளியில் பாடம் நடத்தினால், செவ்வாய்க்கிழமை வேறொரு பள்ளிக்குப் போய் பாடம் நடத்துவார். அதாவது, அந்த ஆசிரியர் ‘பள்ளி வளாக’த்தில் இருக்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும். இதுதான், சமக்ர சிக்ஷா அபியான் சொல்லும் பள்ளி. ஆனால், கதைக்கு உதவாத இந்த ஏற்பாடுகளால் பிற அரசுப் பள்ளிகள் அழியும் நிலைதான் ஏற்படும். பிற அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார்ப் பள்ளியை நோக்கித் துரத்தும் ஏற்பாடு இது. ஒரு கட்டத்தில், சுற்றிலும் இருக்கும் பள்ளிகள் அழிந்து, ‘தலைமைப் பள்ளி’ என்று சொல்லப்படும் பள்ளி மட்டும் எஞ்சியிருக்கும்.
எனவேதான், ‘அருகமைப் பள்ளி’கள் வேண்டும் என்று கேட்கிறோம். மாணவர்கள் நடந்துசெல்லும் தூரத்தில் பள்ளிகள் இருந்தால்தான், பிள்ளைகளுக்கு அனைத்து வகையிலும் அது வசதியானதாக இருக்கும். ஆனால், அருகமைப் பள்ளி குறித்துப் பேசாமல், ‘ஒருங்கிணைந்த பள்ளி’ கொண்டுவருகிறோம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. அரசுப் பள்ளிகளை சிஸ்டமேட்டிக்காக அழிக்கும் ஏற்பாடு தேசியக் கல்விக் கொள்கை மூலமாக வந்திருக்கிறது. இதனால் தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. அதே நேரம், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் ‘இல்லம் தேடி
கல்வி’, ‘வானவில்’, ‘எண்ணும் எழுத்தும்’ போன்ற திட்டங்கள் எல்லாமே மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருக்கும் திட்டங்கள்தான். ஆனால், இவை நாம் உருவாக்கிய திட்டங்கள் என்று சொல்லி அரசை அதிகாரிகள் நம்பவைத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அரசு அதிகாரிகளால் எப்படி நம்பவைக்க முடிந்ததோ, அதுபோல இந்த ஆட்சியிலும் அதிகாரிகள் அமைச்சரை நம்ப வைத்தார்கள். இன்றுவரையிலும், அதிகாரிகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அரசு நினைப்பதைப் போலவே, அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள்.
இன்றைக்கு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்துக்கு நிதி தர மாட்டேன் என்று மத்திய அரசு சொல்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். ஏற்கெனவே கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சமமான கற்றல் வாய்ப்பை எல்லோருக்கும் கொடுப்பது என்ற வகையில் ‘சமச்சீர்க் கல்விக் கொள்கை’ என்பது அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. அதன் முதல் படியாக, பாடத்திட்டங்களும் தேர்வும் ஒருங்கிணைக்கப்பட்டன. அடுத்ததாக, அதன் இலக்கு என்பது ‘சமமான கற்றல் வாய்ப்பு’ என்பதாக இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14-ன்படி, சமமான கற்றல் வாய்ப்பு வருகிறது. அதேபோல, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் ‘கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம்’, 21 ஏ-ல் ‘கண்ணியமிக்க குழந்தைப் பருவம்’ வருகிறது. இந்த இரண்டையும் உள்ளடக்கியதுதான் சமச்சீர்க் கல்விக் கொள்கை.
எனவே, தற்போது நடைமுறையிலிருக்கும் மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்பதைக் கைவிடுவதாகத் தமிழக அரசு அறிவித்து, தமிழக அரசின் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் ஆகியவற்றில் சமமான கற்றல் வாய்ப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதில், உறுதியான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுத்தால், மத்திய அரசு எந்த நீதிமன்றத்துக்குப் போனாலும் அது எடுபடாது.
‘தேசியக் கல்விக் கொள்கையை நிராகரித்துவிட்டு அதற்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவோம்’ என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதை அரசு செய்யவில்லை. மாநில கல்விக் கொள்கை வகுப்பது தொடர்பாக நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து அந்தக் குழு தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை இன்னும் வெளியிடவே இல்லை. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, அந்த அறிக்கை மீது அமைச்சரவை என்ன முடிவை எடுத்திருக்கிறது என்பது குறித்து அரசு சொல்லவே இல்லை.
கலைஞர் கருணாநிதி திட்டத்துக்குச் சமாதியா?
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தும் அளவுக்குக் கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும் என்று கேட்கிறோம். தலைசால் பள்ளி, மாதிரி பள்ளி என்று பாகுபாடு கொண்ட கல்விமுறை வேண்டாம் என்று சொல்கிறோம். இது கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு. இந்த நேரத்தில், அவர் கொண்டுவந்த திட்டத்துக்குச் சமாதி கட்டாதீர்கள் என்று சொல்கிறோம். அதாவது, ‘கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர்க் கல்விதான் எங்கள் கொள்கை’ என்று இந்த அரசு அறிவிக்க வேண்டும். மாறாக, கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர்க் கல்விக்குச் சமாதி கட்டாதீர்கள் என்பது கல்வி மீது அக்கறை கொண்ட அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் ஆகியவற்றைக் கைவிட்டு போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிப்பது, கணினி ஆசிரியர்களையும் உடற்கல்வி ஆசிரியர்களையும் நியமிப்பது, மற்ற பணிகளுக்கான ஊழியர்களை நியமிப்பது போன்றவற்றில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். ஆய்வுக்கூடங்களை வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்களை கற்றல், கற்பித்தல் பணி தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஆனால், இதுபற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படவே இல்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் எடுத்த பணியிடங்கள் திரும்பக் கொடுக்கப்படவில்லை. தொடக்கக்கல்வித்துறையில் கடந்த பத்தாண்டுகளாகப் பணி நியமனமே நடைபெறவில்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. அப்படியென்றால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின் நியமனம் இருக்க வேண்டுமே! ஏன் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை?
பள்ளிக்கல்வித்துறை மர்ம உலகமாக இருக்கிறது. ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள், காலிப்பணியிடங்கள் எத்தனை என்ற விவரங்கள் அதன் கொள்கைக் குறிப்பில் தெளிவாக இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் கொள்கைக் குறிப்பில் அத்தகைய விவரங்கள் இல்லை. ஏன் அவற்றை வெளியிடுவதில்லை?
பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால்தான், அது பற்றிய விவரங்கள் தெரியவரும். நிதி ஒரு பிரச்னையே இல்லை. நிதி தடையாக இருந்தால், அதை அரசு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழக அரசு இதில் மௌனம் காக்கிறது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது பற்றியெல்லாம் பேசாமல் கடந்துபோவதால், பள்ளிகளுக்குள் மூடத்தனங்கள் நுழைகின்றன. போதுமான ஆசிரியர்களை நியமித்து அனைத்துப் பாடங்களும் சரிவர நடந்தால், அறிவியல் ஆய்வகங்களில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணிகள் ஒழுங்காக நடைபெற்றால், விளையாட்டு நேரத்தில் கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவது உறுதிசெய்யப்பட்டால், ‘மோட்டிவேஷனு’க்குத் தேவையே இருக்காதே! மகா விஷ்ணுக்களால் பள்ளிக்குள் நுழையவே முடியாதே!
ஆனால், நம்முடைய பள்ளிகளிலேயே நூறு மகா விஷ்ணுக்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பள்ளிகள் காக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். பள்ளி வளாகத்தைக் காப்பதைவிட அமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன வேலை
- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...