முன்பெல்லாம் ஆசிரியர்களே பதவி உயர்வு பெற்று, தலைமையாசிரியர்களாக வருவார்கள்..
அவர்களே பின்னர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகவும்.. முதன்மைக் கல்வி அலுவலர்களாகவும்.. பின்னர் இணை இயக்குனர்களாகவும்.. பள்ளிக் கல்வி இயக்குனர்களாகவும் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கல்வித்துறையை நிர்வகிப்பார்கள்..
பள்ளிக்கூடம் என்றால்.. மாணவர்கள் என்றால்.. பெற்றோர்கள் என்றால் எப்படி இருப்பார்கள்.. அவர்களை எப்படிக் கையாளுவது என்பது போன்ற நடைமுறை அனுபவங்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இருக்கும்..
பள்ளிகளில் அதிக அனுபவத்தைப் பெற்ற பிறகு, கிட்டத்தட்ட பணி ஓய்வு பெறும் நிலையிலேயே அவர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு வருவார்கள்.
அந்தப் பதவியிலும் ஓரிரண்டு ஆண்டுகளே இருந்துவிட்டு ஓய்வில் சென்றுவிடுவார்கள்..
இதனால் அடுத்தடுத்து சுழற்சி முறையில்.. அதிகாரிகள் வந்து கொண்டே இருப்பார்கள்..
ஒரு பள்ளிக்கூடத்தை.. அரசு அலுவலகம் போல நடத்தக்கூடாது.. நடத்தவும் முடியாது என்கிற பால பாடத்தை அவர்கள் கற்றுக் கொண்டு அதிகாரிகளாக வருவார்கள்..
அரசுக் கோப்புகளைப் போல்.. மாணவர்களைக் கையாளமுடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்..
இதனால்.. பள்ளியில் நிகழும் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை அதிகாரிகள் யூகித்து அதைச் சரியான முறையில் கையாளுவார்கள்..
ஆனால்..
சமீப காலமாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நேரடி நியமனங்கள் வந்த பிறகு.. அவர்கள் வெகுவிரைவாக குறைந்த வயதிலேயே முதன்மைக் கல்வி அதிகாரிகளாக.. இணை இயக்குனர்களாக.. பள்ளிக் கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுவிடுகின்றார்கள்..
40 வயதில் ஒருவர் பள்ளிக் கல்வி இயக்குனராகிவிட்டால்.. அவர் 20 ஆண்டுகள் அதே பதவியில் இருப்பார்..
அவர் பணியிடம் காலியாகாததால்.. அடுத்த நிலையில் உள்ள இணை இயக்குனர்களுக்கு பதவி உயர்வே வராது..
அவர்களுக்குக் கீழே உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பதவி உயர்வு வராது..
கல்வித்துறையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுவிடும்..
பள்ளிக்கூட அனுபவமே சிறிதும் இல்லாதவர்கள்.. முதன்மைக் கல்வி அதிகாரிகளாக.. இணை இயக்குனர்களாக.. இயக்குனர்களாக 20 ஆண்டுகள் பதவிகளில் இருந்தால்.. என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்..
இதனால்தான் அரங்கநாயகத்திற்குப் பிறகு.. கல்வித்துறையை முற்றிலும் புரிந்து கொண்டு கையாள்வதில் கல்வித்துறை அமைச்சர்களுக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகிறது.
இன்றைக்கு பள்ளிக் கல்வி இயக்குனர்களில் 100% பேர்.. இணை இயக்குனர்களில் 100% பேர்.. முதன்மைக் கல்வி அலுவலர்களில் 80% பேர்.. மாவட்டக் கல்வி அலுவலர்களில் 50% நேரடி நியமனங்களில் வந்தவர்களே..
இப்பொழுது தொடக்கக் கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அதிகாரிகள் பதவிக்கும் நேரடி நியமனங்கள் துவங்கியிருக்கிறது..
குழந்தைகளைக் கையாளுவது பற்றிய முன்னனுபவமே இல்லாதவர்கள் தொடக்கக் கல்விக்கு அதிகாரிகளாக வந்தால்.. என்னவாகும் என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
கல்வித்துறையில் நேரடி நியமனங்களே வேண்டாம் என்று சொல்ல நான் வரவில்லை..
தலைமையாசிரியராகுவதற்கே குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் ஆசிரியப் பணியனுபவம் வேண்டும் என்பது சட்டம் எனில்.. அதிகாரிகளாகுவதற்கும் குறைந்தபட்சம் ஒருவர் மூன்றாண்டுகளாவது தலைமையாசிரியர்களாக ஒரு பள்ளியில் இருந்திருக்கவேண்டும் என்ற விதிமுறைகளை வகுப்பது கட்டாயம்..
அரசு இதுபற்றி பரிசீலிக்க வேண்டும்..
கல்வித்துறையில் ஆசிரியர்களாகப் பணிபுரிவதற்கே B.Ed / D.T.Ed என்ற சிறப்புப் பயிற்சி பெற்றாக வேண்டும் என்பது சட்டம்..
ஏனென்றால் மாணவர்கள் என்பவர்கள் வெறும் கோப்புகள் அல்ல.. உயிரோடிருக்கும் ஜீவன்கள்..
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான குணாதிசயம் பெற்றவர்கள்..
ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருந்தால்.. நாற்பது பேரும் நாற்பது விதமாக செயல்படும் தன்மை பெற்றவர்கள்..
அந்த வகுப்பறையின் ஆசிரியர் 40 மாணவர்களோடு 80 பெற்றோர்களையும் கையாளும் தன்மை பெற்றவராக இருத்தல் மிகவும் அவசியம்..
இதனால்தான் B.Ed / D.T.Ed போன்ற பயிற்சிகளில் குழந்தைகள் சைக்காலஜி பாடப்பிரிவுகள் உண்டு..
ஒரு ஆசிரியருக்கே அந்தத் தகுதி வேண்டும் என்றால்.. அந்தத் துறையை இயக்குகின்ற இயக்குனருக்கு அந்தப் பயிற்சிகள் அவசியமா இல்லையா என்பதை சமூகத்தின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்..
இன்றைக்கு தமிழ் சமூகத்தில் கற்றறிந்தவர்கள் எல்லாத் துறைகளிலும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால்.. அதற்குக் காரணம் பத்தாண்டுகளுக்கு முன் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒரு புரிதல் இருந்தது..
இணக்கம் இருந்தது..
இறுக்க வேண்டிய இடத்தில் இறுக்கினார்கள்..
இளக வேண்டிய இடத்தில் இளகினார்கள்..
ஆனால்..
இப்பொழுது.. கடந்த பத்தாண்டுகளாக அந்தப் புரிதல்கள் இல்லை..
முன்பெல்லாம் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டங்களில் ஆக்கபூர்வமான விவாதங்கள் ..கலந்துரையாடல்கள் நடைபெறும்.
ஆனால் இப்பொழுதெல்லாம் அவைகள் ஒரு சம்பிரதாயச் சடங்குகள் போலவும். ஒரு வழிப்பாதையுமாகவே அமைந்திருக்கிறது..
அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களைக் காண்பிக்கும் வறட்டுக் கூட்டங்களாகவே அவைகள் மாறி வருகிறது..
மற்ற துறைகளைப் போலத் தயவு செய்து.. கல்வித்துறையைப் பார்க்காதீர்கள்..
அணுகாதீர்கள்..
அது மிகவும் ஆபத்தானது என்பதை இன்னும் பத்தாண்டுகள் கழித்துதான் நாம் அதை உணர்வோம்..
அப்பொழுது கல்வி முற்றிலும் நம்மைப் போன்ற சாமானியர்களின் கையைவிட்டு வெளியே போயிருந்திருக்கும்..
ஏழைகளும்.. நாதியற்றவர்களும்.. தாழ்த்தப்பட்டோரும்.. பிற்படுத்தப்பட்டோரும் கல்வி மறுக்கப்படுபவர்களாகவும்..
வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி சாத்தியமானதாகவும் மாறியிருக்கும் அப்போது..
நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் மனித வளங்கள் வீணாகிவிடுவதற்குக் காரணமாகிவிடும்..
அதை ஒருபோதும் ஒருவராலும் சரி செய்து விட முடியாது..
It will be an irreparable loss to the society..
*சார்ந்தோர் பரிசீலித்தால்.. அது சமூகத்துக்கு மிகவும் நல்லது..*
*வேறொன்றும் சொல்வதற்கில்லை...*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...