வன்மையாக கண்டிக்கிறோம்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள், அது போல பள்ளிக்கூடங்களில் எந்தப் பிரச்சனை நடைபெற்றாலும் அதற்கு ஆசிரியர்களை பலிகிடா ஆக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை மட்டும் செய்வதற்கு அவர்களுடைய பணி நேரத்தை ஒதுக்கிவிட்டு, மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 90% வருகை பதிவேடு இருக்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்தால் மட்டுமே தற்போதைய சூழ்நிலை ஆசிரியர்கள் தங்களால் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.
மேற்சொன்ன சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்து பள்ளிகளிலும் இருந்தது. இதனால் அனைத்து பள்ளிக்கூடங்களில் மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களது பணியை சிறப்பாக செய்ததால் கல்வியின் மூலம் மாணவர்கள் ஒழுக்கத்தையும், வாழ்வின் உயரத்தையும் எளிமையாக எட்டிப் பிடித்தார்கள்.
தற்போது ஆசிரியர்கள் கற்பித்தல் பணியைத் தவிர கூடுதலாக பல்வேறு பணிகளை செய்யும் நிலையை உருவாக்கி விட்டதால் பெரும்பாலான நேரங்களில் அவர்களால் கற்பித்தல் பணியை முன்பு போல் சிறப்புடன் முழுமையாக செய்ய முடியவில்லை.
மேலும் மாணவர்கள் எந்த ஒரு ஒழுங்கீனமான செயல்களை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருப்பதால் சிறு சிறு தவறுகளை செய்வதற்கு பயந்து கொண்டிருந்த மாணவர்களும் தற்போது துணிச்சலாக வெளியில் சொல்ல முடியாத பல விரும்பத்தகாத செயல்களை தினமும் செய்து கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
ஆசிரியர்களின் நிலை மதிக்கத்தக்க வகையில் இருந்தால் மட்டுமே சமுதாயம் செம்மையடையும் என்ற நிலை மாறி, தற்போது ஆசிரியர் பணி என்பது அனைவராலும் ஏளனமாக பார்க்கும் சூழலை ஒவ்வொரு அரசும் திட்டமிட்டு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகள் செல்போன் மூலமாக வீடியோ அல்லது போட்டோ எடுத்து அதனை வைத்து ரீல்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
வகுப்பறையில் வைத்து தாலி கட்டிக் கொள்வது அல்லது பள்ளி வளாகத்திற்குள் திருமணம் செய்வது போல வீடியோ எடுப்பது.
பள்ளி வளாகத்திற்குள் மது அருந்துவது போல வீடியோ எடுத்து வெளியிடுவது.
சினிமாவில் இடம்பெற்ற பாடல்கள் அல்லது வசனங்களை நடித்துக் காட்டுவது போல பள்ளிக்கூடங்களில் சீருடை அணிந்து வீடியோ எடுத்து வெளியிடுவது.
மாணவர்களிடையே சண்டை போடும் நிகழ்வுகளை வீடியோவில் எடுத்துப் போடுவது என மாணவ, மாணவிகள் தினமும் ஏதேனும் செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
நேற்றைய தினம் வேலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறையில் வளைகாப்பு நிகழ்ச்சியை மாணவிகள் நடத்தி இருப்பது மாணவ, மாணவிகள் மீது ஆசிரியர்களோ அல்லது அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதற்கான சான்றாக அமைந்திருக்கிறது.
ஏதோ மாணவிகள் வகுப்பறையில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் அந்த வகுப்பு ஆசிரியர் செய்து கொடுத்தது போல அவர் மீது நடவடிக்கை எடுத்து பலி சுமத்துவதும், அந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உட்பட மற்றவர்கள் மீது விசாரணை நடத்தி இந்த நிகழ்வை திசை திருப்புவதும் ஏற்புடையது அல்ல.
ஒரு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் அந்த வகுப்பறை நேரத்தில் மட்டுமே வகுப்பறையில் இருக்க முடியும். மற்ற நேரங்களில் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்பிற்கு பாடம் நடத்த செல்ல வேண்டும் அல்லது தலைமையாசிரியர்களால் வழங்கப்படும் கற்பித்தல் பணி தவிர பிற பணிகளை செய்வதற்கு ஆசிரியர் அறையில் அமர்ந்து ஏதேனும் பணிகளை செய்து கொண்டு இருப்பார்கள் அல்லது தலைமையாசிரியர் அறையில் அல்லது அலுவலகத்தில் ஏதேனும் பணி நிமித்தமாக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
பெரும்பாலும் மாணவ, மாணவிகள் வகுப்பறை இல்லாத உணவு இடைவேளை போன்ற இடைவேளை நேரங்களில் இது போன்ற வீடியோக்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
உணவு இடைவேளையின் போது அல்லது மற்ற இடைவேளை நேரங்களில் ஆசிரியர்களும் உணவு அருந்துவது, தங்களை அடுத்த பாட வேளைக்கு தயார் படுத்திக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, இது போன்ற நிகழ்வுகளுக்கு வகுப்பாசிரியரை குற்றம் சுமத்துவது நியாயமானது இல்லை.
பள்ளிக்கூடங்களில் அல்லது பொதுவெளியில் மாணவர்கள் செய்யும் ஒழுங்கீன செயல்பாடுகளுக்கு குறைந்தபட்சம் ஏதேனும் சிறு தண்டனை அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகள் இருந்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் பள்ளிக்கூடங்களில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்க முடியும்.
*குற்றம் செய்யக்கூடிய மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தாமல், ஆசிரியர்கள் மீதோ அல்லது தலைமை ஆசிரியர் மீதோ நடவடிக்கை எடுத்து அரசு இந்த பிரச்சினையை திசை திருப்புவது பள்ளிக்கூட சூழலை மேலும் மோசமானதாக ஆகிவிடும்.*
பள்ளிக்கூடங்கள் என்பது கற்பித்தல் பணிக்காக மாணவ, மாணவிகள் விரும்பிச் செல்லும் இடமாக இருந்த நிலை, தற்போது மாணவர்கள் அவர்களுடைய பொழுதுபோக்கிற்காக சந்தித்துக் கொள்ளும் ஒரு இடமாகவும், தங்களை ஹீரோக்களாக காண்பிப்பதற்காக வீடியோக்களை எடுத்து வெளியிடும் இடமாகவும் இருப்பது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
இந்த நிலை நீடித்தால் பள்ளிக்கூடங்கள் என்பது இளம் குற்றவாளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
நல்ல மாற்றங்களை விரைந்து எடுத்து அரசு மாணவர்களையும், பள்ளிக்கூடங்களையும் மதிக்கத்த வகையில் உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மூ. மகேந்திரன்,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...