குழந்தைகள் அச்சப்படாத முறையில் குழந்தைகளை மதிப்பீடு செய்கிறார் என்று சொல்லலாம். இதுதான் மதிப்பீடு செய்யும் முறையின் அடிப்படை இலக்கணம்.
எந்தப் பள்ளியிலும் எந்த ஆசிரியரையும் அமைச்சர் அவர்கள் வசைபாடுவதைப் பார்க்க முடிவதில்லை. அதற்காக பள்ளிகளில் எந்தக் குறையும் இல்லை என்பது பொருள் அல்ல. குறைகளும் இருக்கலாம். குறைகளை மட்டும் வெளிச்சமிட்டுக் காட்டுவது சரியான ஆய்வு முறை அல்ல. குறைகளையும் உரையாடல் மூலம் அரசாளுகை நிர்வாக முறைகள் மூலம் சரி செய்ய முயற்சிப்பதே பள்ளிகளுக்குள் ஆய்வுக்குச் செல்வோரின் சரியான அணுகு முறையாக இருக்க முடியும்.
தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பள்ளியை ஆய்வு செய்த போது அவர் நடந்து கொண்ட முறை ஆசிரியர்களிடம் கோபத்தை உருவாக்கியுள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் இரண்டிலும் நிறைகளும் இருக்கும் குறைகளும் இருக்கும். ஒரு ஆய்வாளர் நிறைகளையும் தேட வேண்டும். நிறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
குறைகள் இல்லாமல் இருக்காது. ஆனால் குறைகளைச் சூட்டி கட்டுவதற்கு சரியான வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
ஒரு மாணவரின் கற்றல் செயல்பாட்டில் குறைகள் இருந்ததற்காகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரை வேலையை விட்டுச் செல்லும்படி மாவட்ட ஆட்சியர் கூறியது முறையல்ல. இது குறையை சரி செய்வதற்கான தீர்வல்ல.
மாணவர்கள், ஊடகத்தினர் முன்னிலையில் இப்படிப் பேசியது மாவட்ட ஆட்சியருக்கான பணி விதிகளுக்கு உட்பட்ட நடத்தை முறையும் அல்ல, அதிகார முறையும் அல்ல.
ஆசிரியர்களைப் பணி அமர்த்துவதற்கான, பணிகளைக் கண்காணிப்பதற்கான நிர்வாக அமைப்புதான் பணி விதிகளின்படி குறைகளுக்கான தீர்வுகளைத் தீர்மானிக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் கற்றல் ஆர்வத்தை, கற்றல் திறனை, கற்றல் செயல்பாட்டை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. பள்ளிக்கு வெளியில் உள்ள சூழல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தையின் கல்வியில் குடும்பத்தின் பங்கும் முதன்மையானது.
மரபுநிலையும் சூழ்நிலையும் ஒரு குழந்தையின் நடத்தை மற்றும் கற்றலைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பதை கல்வி உளவியல் வலியுறுத்துகிறது. பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததும் இருக்கின்ற ஆசிரியர்களும் முழுமையாக கற்றல் கற்பித்தலில் கவனம் செலுத்த முடியாமையும் இன்றைய கல்வி நிர்வாகத்தின் பெரும் குறை என்று சொல்லலாம். பல காரணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும் உயர் அலுவலர்கள் தற்போது நடந்துள்ள நிகழ்விலிருந்து புதிய அனுபவப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறைகளுக்கான காரணங்களை ஆசிரியரிடமும் மாணவர்களிடமும் உரையாடல் மூலம் அறிந்து சரி செய்வதற்கான வழியைச் சொல்ல வேண்டும்.
குறைகளுக்கான காரணம் நடவடிக்கைக்கு உரிய தவறாக இருந்தால் ஆசிரியரின் மீது உரிய நடவடிக்கையை முறைப்படி எடுக்கலாம். தவறு இருந்தாலும் நடவடிக்கையே எடுக்கக் கூடாது என்று யாரும் வாதிட முடியாது. அது அறமும் அல்ல. ஒரு ஆசிரியரின் தவறினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.
அதே சமயத்தில்,அதிகாரம் என்பது தன்னைவிட அதிகாரம் குறைவான பதவியில் இருப்பவர்களை வசைபாடும் உரிமையல்ல, இழிவு செய்யும் உரிமையல்ல என்பதை எல்லா ஆய்வு அலுவலர்களும் புரிந்துகொண்டு செயல்படுவது மட்டுமே நன்மையை விளைவிக்கும்.
மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்கள் ஏதோ தங்களுடைய தனித்திறன்களால் பதவியை அடைந்து விட்டதாகக் கருதக்கூடாது. அதிகாரம் குறைவான பதவியில் இருப்பவர்கள் அதிகாரமிக்க பதவிக்கு தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் என்று கருதக்கூடாது. ஒரு சிலருக்கு கிடைத்த வாய்ப்புகள் சூழல்கள் மற்றவர்களுக்கு வாய்க்கப் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"கல்வித்துறையில் அதிகாரி என்ற சொல்லே இருக்கக் கூடாது" என்று மூத்த கல்விச் சிந்தனையாளர் ச.சீ. ராஜகோபாலன் அவர்கள், ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்களின் தற்காலிகப் பணி நீக்க நடவடிக்கையின் போது குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
ஒரு மாணவரின் கற்றல் செயல்பாட்டில் குறை இருந்தால் ஆசிரியரை "வேலையை விட்டுவிட்டுப் போ" என்று ஒரு மாவட்ட ஆட்சியரால் சொல்ல முடிகிறது. ஆனால் கற்றல் செயல்பாட்டில் ஒரு மாணவரிடம் குறை இருந்தால் "பள்ளியை விட்டுப் போய்விடு" என்று ஆசிரியர்கள் சொல்வதில்லை.
அது கல்வியின் அறமும் இல்லை. உண்மையில் கல்வி கற்க முடியாத சூழலில் வாழ்பவர்கள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆய்வு அலுவலர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்கள் நம்முடைய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் பள்ளி ஆய்வைப் பற்றிப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...