கல்வியை கற்க விரும்பும் மாணவர்களுக்கான, புதிய சேர்க்கை நடைமுறைகளை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
நாட்டில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு கல்வி நிலையங்கள் ஆன்லைன் வழியாகவும், தொலைநிலை வழியாகவும், திறந்தநிலை வாயிலாகவும், பல்வேறு படிப்புகளை நடத்துகின்றன. அவற்றில் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும், புகார்களின் வாயிலாக யு.ஜி.சி., அறிந்தது. இதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம், ஜூன் 25ல், டில்லியில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் மமிதாலா ஜெகதேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த கல்வியாண்டின், தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை, அடுத்த மாதம் அமலாகும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேருவதை, வெளிப்படைத்தன்மையுடன் உறுதி செய்ய முடியும். மாணவர்கள், யு.ஜி.சி.,யின், https://deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொலைதுார கல்வி நிறுவனங்களின் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், யு.ஜி.சி - டி.இ.பி., இணையதள போர்ட்டலின் மாணவர்களுக்கான, deb.ugc.ac.in/StudentDebId என்ற பக்கத்தில் பதிவு செய்து, அவர்களின், 'அகாடமிக் பாங்க் ஆப் கிரடிட்' -ஐ.டி.,யை பயன்படுத்தி, தனித்துவமான ஆயுள் கால அடையாள குறியீட்டை பெற வேண்டும்.
இதை பயன்படுத்தி தான், தொலைநிலை கல்வி சேர்க்கையில் இணைய முடியும். இந்த ஆயுள் கால ஐ.டி.,யைதான், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்க வலியுறுத்தப்படும். இதனால், அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் படிப்புகளில் சேர்வதை தவிர்க்க முடியும். மேலும் விபரங்களை, https://deb.ugc.ac.in என்ற இணையதள உதவி மையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...