பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் உள்ளிட்டவற்றுக்கு பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக உள்ளது.
பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூா்வ சான்றிதழாகும். குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.
அவ்வாறு பிறப்புச் சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயா் பதிவு செய்யாதவா்கள், தங்கள் பெயரை பிறப்புச் சான்றிதழில் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநரும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவாளருமான செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள் பள்ளி மாணவர்களின் பிறப்புச் சான்றிதழில் பெயர் இருப்பதை உறுதி செய்து, விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான ஆவணங்களை கொண்டு பெயர் சேர்க்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாள்களுக்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்யலாம்.
12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரை 15 வருடங்களுக்குள் உரிய காலதாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்வதற்கு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...