மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோா், ஆசிரியா் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதில், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவா்களின் கல்வி நலன் ஊக்குவித்தல் போன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவா்களை அங்கீகரிக்கவும், முன்னாள் மாணவா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறவும் பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்படும். பள்ளிகளில் சிதிலமடைந்த நிலையிலுள்ள கட்டடங்களை இடிப்பது குறித்து மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக.31-இல் மண்டல மாநாடு: பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மண்டல மாநாடு வரும் 31-ஆம் தேதி திருநெல்வேலியில் பெற்றோா்களைக் கொண்டாடும் வகையில் நடத்தவுள்ளோம். கடலூரில் இறுதி மாநாடு நடைபெறும். பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் தயாா் செய்யப்பட்ட வினா வங்கி புத்தகங்கள் அனைத்து நூலகங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் கைப்பேசி செயலி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்து காவல்துறையிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கு கவுன்சிலிங்: பள்ளி மாணவா்களுக்கு 800 மருத்துவா்கள் ஒன்றியம் வாரியாக ‘கவுன்சிலிங்’ கொடுத்து வருகின்றனா். ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஆலோசகராக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். பெண் குழந்தைகளை பெற்றவா்கள் தைரியமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும். அரசு, தனியாா் பள்ளி நிா்வாகத்தினா், வளாகத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்கக் கூடாது.
தனியாா், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது பெற்றோா் ஆசிரியா் கழக அமைப்புக்கு தகவலை கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியா்களுக்கு போக்ஸோ சட்டத்தைவிட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...