கல்வியில் சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றார் மகாகவி சுப்ரமணிய பாரதி. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் உயர் கல்வியின் மையமாக விளங்கி வருகிறது நமது சென்னை. சென்னைக்கு பல பெருமைகள் உண்டு. அந்த வகையில், மாநிலத்தின் உயர் கல்வியின் மையம் என்ற பெருமையும் அதற்கு உண்டு. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டுமானால், தரமான உயர் கல்விக்கான மையம் என்றும் சென்னையை சொல்லலாம்.
நமது நாட்டின் கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான அறிக்கை கடந்த 12-ம் தேதி (12.08.2024) வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், விவசாயம் மற்றும் வேளாண் துறைகள், புதுமை கண்டுபிடிப்புகள், அரசு பொது பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களை பிரித்து அந்தந்த பிரிவிலும் தர வரிசையை தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்களை கணக்கில் கொண்டு கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் (Overall): ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கல்வி நிறுவனம் சென்னை ஐஐடி. இந்த கல்வி நிறுவனம் 2019 முதல் தொடர்ந்து இந்த பிரவில் முதலிடம் பிடித்து வருகிறது. இந்த பிரிவில் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ள கல்வி நிறுவனங்களில் 8 கல்வி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. இந்த பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 20வது இடத்தையும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 21வது இடத்தையும், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 22வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 64வது இடத்தையும், சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 85வது இடத்தையும், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 91வது இடத்தையும், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 96வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் பிரிவில் முதல் 100 இடங்களில் 8 உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள நாட்டின் ஒரே மாநகரம் சென்னைதான். இந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டில் 18 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சென்னையை தவிர்த்து பிற நகரங்களை எடுத்துக்கொண்டால் கோவை 2, வேலூர் 1, திருச்சி 2, தஞ்சை 1, ஸ்ரீவில்லிபுத்தூர் 1, காரைக்குடி 1, காலவாக்கம் 1, சேலம் 1 ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள் (Universities): நாடு முழுவதும் உள்ள 100 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு 22 பல்கழைக்கழகங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 8 பல்கலைக்கழகங்கள் சென்னையை மையமாகக் கொண்டு செயல்படக்கூடியவை. சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 11வது இடத்தையும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 12வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 13வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 39வது இடத்தையும் பிடித்துள்ளன. சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 51வது இடத்தையும், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 55வது இடத்தையும், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 73வது இடத்தையும், வேல்டெக் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 96வது இடத்தையும் பிடித்துள்ளன.
சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களை எடுத்துக்கொண்டால் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் கோவை 4, வேலூர் 1, தஞ்சை 1, ஸ்ரீவில்லிபுத்தூர் 1, திருச்சி 1, காரைக்குடி 1, சேலம் 1, மதுரை 1, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) 1, திருநெல்வேலி 1, திருவாரூர் 1 பல்கலைக்கழங்களைக் கொண்டுள்ளன.
கல்லூரிகள் (Colleges): நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளில் தமிழகம் 37 கல்லூரிகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் சென்னை மட்டும் 9 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. லயோலா கல்லூரி 8வது இடத்தையும், மாநில கல்லூரி 13வது இடத்தையும், சென்னை கிறிஸ்தவ கல்லூரி 14வது இடத்தையும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி 30வது இடத்தையும், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி 67வது இடத்தையும், ராணி மேரி கல்லூரி 71வது இடத்தையும், சமூக பணிக்கான சென்னை பள்ளி 73வது இடத்தையும், எத்திராஜ் கல்லூரி 79வது இடத்தையும், குருநானக் கல்லூரி 89வது இடத்தையும் பிடித்துள்ளன.
சென்னையை தவிர்த்த பிற நகரங்களில் உள்ள கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் இந்த பிரிவில் கோவை 9 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. மதுரை 2, திருச்சி 5, தூத்துக்குடி 2, பாளையம்கோட்டை 1, மார்த்தாண்டம் 1, பெரம்பலூர் 1, திருப்பத்தூர் 1, சிவகாசி 1, காரைக்குடி 1, விருதுநகர் 1, கும்பகோணம் 1, திருநெல்வேலி 1, நாகர்கோவில் 1 என கல்லூரிகளைக் கொண்டுள்ளன.
ஆய்வு கல்வி நிறுவனங்கள் (Research Institutions): இந்த பிரவில் நாட்டின் முதல் 50 நிறுவனங்களில் தமிழ்நாடு 9 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில், சென்னை 4 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. சென்னை ஐஐடி 2வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 17வது இடத்தையும், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 20வது இடத்தையும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 24வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பிரிவில் கோவை 2, வேலூர் 1, திருச்சி 2 நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
பொறியியல் (Engineering): நாட்டின் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு 14 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. இதில், சென்னை அதிகபட்சமாக 6 கல்லூரிகளைக் கொண்டுள்ளது. சென்னை ஐஐடி 1வது இடத்தையும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 13வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தையும், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 53வது இடத்தையும், சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 66வது இடத்தையும், வேல்டெக் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 86வது இடத்தையும் பிடித்துள்ளன.
சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால் இந்த பிரிவில் கோவை 3, வேலூர் 1, திருச்சி 1, ஸ்ரீவில்லிபுத்தூர் 1, தஞ்சாவூர் 1, காலவாக்கம் 1 என சிறந்த பொறியியல் கல்லூரிகளைக் கொண்டுள்ளன.
கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு 11 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில் சென்னை 5 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த பிரவில் தேசிய அளவில் சென்னை ஐஐடி 16வது இடத்தையும், கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனம் 34வது இடத்தையும், லயோலா வணிக மேலாண்மை நிறுவனம் 66வது இடத்தையும், அண்ணா பல்கலைழக்கழகம் 69வது இடத்தையும், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 74வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பிரிவில் சென்னையை தவிரத்த பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால், திருச்சி 2, கோவை 2, மதுரை 1 நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
மருந்தியல் (Pharmacy): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 12 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 5 சென்னையில் உள்ளன. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 11வது இடத்தையும், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 31வது இடத்தையும், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆய்வு நிறுவனம் 64வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் கல்லூரி 78வது இடத்தையும், பி.எஸ். அப்துர் ரகுமான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 84வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பிரிவில், சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால் கோவை 2, ஊட்டி 1, அண்ணாமலைநகர் 1, ஈரோடு 1, ஸ்ரீவில்லிபுத்தூர் 1, சேலம் 1 என கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
மருத்துவம் (Medical): நாட்டின் சிறந்த 50 மருத்துவ கல்வி நிறுவனங்களில் 7 தமிழகத்தில் உள்ளன. இதில், 4 சென்னையில் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை தேசிய அளவில் 10வது இடத்தையும், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 12வது இடத்தையும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 18வது இடத்தையும், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 20வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பிரிவில் சென்னையை தவிர்த்த மாநிலத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் கோவை 2, வேலூர் 1 என கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
பல் மருத்துவம் (Dental): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்த 40 கல்வி நிறுவனங்களில் தமிழகம் 9 கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் சென்னை மட்டுமே 6 கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இதில், சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் தேசிய அளவில் 1வது இடத்தையும், எஸ்ஆர்எம் பல்மருத்துவக் கல்லூரி 7வது இடத்தையும், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 10வது இடத்தையும், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 13வது இடத்தையும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 20வது இடத்தையும், எஸ்ஆர்எம் காட்டாங்கொளத்தூர் பல்மருத்துவக் கல்லூரி 32வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பிரிவில் சென்னையை தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் கோவை 1, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு மாவட்டம்) 1, மேல்மருவத்தூர் 1 என கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
சட்டம் (Law): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் முதல் 40 கல்வி நிறுவனங்களில் தமிழகம் 2 கல்வி நிறுவனங்களை மட்டுமே கொண்டுள்ளது. அதில் ஒன்று சென்னையில் உள்ளது. சவிதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் தேசிய அளவில் 13வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையை தவிர்த்து தஞ்சாவூரில் உள்ள ஷண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 14வது இடத்தை பிடித்துள்ளது.
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் (Architecture and Planning): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் 40 கல்வி நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் 4 நிறுவனங்கள் உள்ளன. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 11வது இடத்தையும், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 22வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 34வது இடத்தையும், பி.எஸ். அப்துர் ரகுமான் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் 40வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த பிரிவில் சென்னையை தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், திருச்சி மற்றும் மதுரை ஆகியவை தலா ஒரு கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
விவசாயம் மற்றும் வேளாண் துறைகள் (Agriculture and Allied Sectors): இந்த பிரிவில், தேசிய அளவில் சிறந்து விளங்கும் 40 கல்வி நிறுவனங்களில் தமிழகம் 6 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில் சென்னை ஒரு கல்வி நிறுவனத்தைக் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 17வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால் கோவை, தஞ்சை, அண்ணாமலைநகர், நாகப்பட்டினம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை தலா ஒரு கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
புதுமை (Innovation): இந்த பிரிவில் தேசிய அளவில் 10 நிறுவனங்களே சிறந்து விளங்குகின்றன. இவற்றில் 2 நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இரண்டுமே சென்னையில் இயங்குபவை. ஒன்று, சென்னை ஐஐடி 2வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 10வது இடத்தையும் பிடித்துள்ளன.
அரசு பொது பல்கலைக்கழகம் (State Public University): இந்த பிரிவில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் முதல் 50
கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு 10 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 2 நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. இந்த பிரிவில் அண்ணா பல்கலைழக்கழகம் தேசிய அளவில் முதலிடத்திலும், சென்னை பல்கலைழக்கழகம் 12வது இடத்திலும் உள்ளன.
இந்த பிரவில் சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை எடுத்துக்கொண்டால், கோவை 2, திருச்சி 1, காரைக்குடி 1, சேலம் 1, மதுரை 1, அண்ணாமலைநகர் 1, திருநெல்வேலி 1 என நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
நாம் இங்கே பார்த்தவை அனைத்தும் தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழக கல்வி நிறுவனங்களைப் பற்றி மட்டுமே. இவற்றில் தமிழக அளவில் சென்னை முதலிடத்தில் இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
இவை தவிர, தக்ஷன் பாரத் இந்தி பிரச்சார சபா, ஐஐஐடி, கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷன், இந்திய கடல்சார் பல்கலைழக்கழகம், கணித அறிவியல் நிறுவனம், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் இணைய கல்விக்கழகம் என பல்வேறு தேசிய கல்வி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. இவை தவிர பல்வேறு அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகள் என சென்னை ஏராளமான கல்வி நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல; தமிழகத்தின் உயர்கல்வியின் தலைநகரமாகவும் நமது சென்னை விளங்குகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...