Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வு ஏன்? - தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம்

 பள்ளி பாடப் புத்தகங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், விற்பனை விலையானது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 7 கோடி பாடப் புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு பாடநூல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி பாடப் புத்தகங்களின் விலை ரூ.40 முதல் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக பாடநூல் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் சிலர் கூறியது: “பாடப் புத்தகங்களின் விற்பனை விலையை பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை அடிப்படையாகக் கொண்டு விலையானது மறுநிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக தமிழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்ட போது விலை திருத்தியமைக்கப்பட்டது.

17235571593057

தரம் உயர்ந்த எலிகண்ட் பிரின்டிங் பேப்பர் 80 ஜிஎஸ்எம் தாள் மற்றும் 230 ஜிஎஸ்எம் ஆரா போல்டு புளுபோர்டு மேலட்டை கொண்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டதால் விலையானது உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் புத்தகங்களின் உற்பத்தி செலவீனம் தற்போது கணிசமாக உயர்ந்துவிட்டது. அதாவது, 2018-2019-ம் ஆண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதைவிட தற்போது புத்தகங்களுக்கான உற்பத்தி பொருட்களான தாள் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு புத்தகத்துக்கான உற்பத்தி செலவீனம் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.

இதையடுத்து, நடப்பாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.90 வரை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30-40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30-50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40–70 வரையும், 9-12 வகுப்புக்கு ரூ.50–90 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. மேலும், அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும்” என்று அவர்கள் கூறினர். எனினும், பாடநூல் விலையேற்றத்துக்கு தனியார் பள்ளிகள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive