Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனின் வாழ்க்கையை மாற்றிய 'ஜூலியா மிஸ்'.. இதயத்தை நெகிழ வைத்த பதிவு

virudhunagarcollector2-1724731421

ஒரு ஆசிரியர் தன் பணியை ஆத்மார்த்தமாக செய்தால் எத்தனை பேரை அது ஊக்குவிக்கும். அப்படி ஊக்குவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றுபவர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு இந்த பேஸ்புக் பதிவு என்று கூறி டீக்கடையார் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் எழுதி வரும் எழுத்தாளர் முரளி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ள தகவல்களை அப்படியே பார்ப்போம். "எங்கள் கிராமத்துப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு டீச்சர் வந்தார், ஜூலியா மிஸ். மற்ற டீச்சர்கள் எல்லாம், "ஏய் கையகட்டி வாயில விரலவை, லைன்ல நில்லு, பேசாம மனசுக்குள்ள படி" இப்படி மர அடிஸ்கேலோடு சுற்றி வர ஜூலியா மிஸ் மட்டும், கண்ணுங்களா வாங்க நம்ம ஸ்கூல சுத்தி இருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் நான் இங்கிலீஷ் பெயர் சொல்லி தரேன் என்று பள்ளியை சுற்றிக் காட்டி ஆங்கில வகுப்பு நடத்துவார்.

Virudhunagar Collector teacher

நாளைக்கு நம்ம நாட்டுல இருக்கிற எல்லா மாநிலங்கள் பெயர்களையும் எழுதிட்டு வந்தீங்கன்னா உங்களுக்கு சாக்லேட் கொடுப்பேன் என்று மகிழ்விப்பார். ஆங்கில நாளிதழ்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொடுத்து வகுப்பில் வாசிக்கச் செய்வார்.‌ இப்படி, இன்னும் அவர் என்னவெல்லாம் செய்தார் என்று நினைவில் இல்லை, ஆனால் படிப்பதை ஜாலியாகவும் படித்தால் பெருமையும் பாராட்டும் கிடைக்குமென புரிய வைத்தார் என்பது மட்டும்‌ என் நினைவில் இப்போதும் இருக்கிறது.‌‌

என்னை அந்த டீச்சருக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு பொது அறிவு கேள்விகளுக்கு நான் தான் அவரிடம் பதில் சொல்லி பரிசும் பாராட்டும் வாங்குவேன். ஒரு நாள் ஏதோ மன்னரின் அரசவைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதை நாடகமாக போடலாம் என்று சொல்லி மாணவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் கொடுத்தார், எனக்கு மந்திரி வந்தது. 'மிஸ் நான் மந்திரியாக எல்லாம் நடிக்க மாட்டேன் எனக்கு ராஜாவா தான் நடிக்கணும்' என்று அவரிடம் அடம் பிடித்தேன். 'இல்லடா மந்திரிக்கு தான் நிறைய டயலாக் இருக்கும் அதனால மந்திரியா நடி' என்று சொன்னார். டேய் டீச்சர் சொன்னால் கேளுடா என்றார், நான் கேட்கவில்லை அடம்பிடித்து ராஜாவாகத்தான் நடித்தேன்.‌‌ ஆனால் கோபிக்காமல் அந்த நாடகத்தை நன்றாக செய்ய வைத்தார்.‌

நான்காம் வகுப்பில் ஒரு நாள் எங்கள் வகுப்பை மதுரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறேன் என்றார். அதுவரை இப்படி எல்லாம் நாங்கள் கேள்வி கூட பட்டதில்லை. ஐந்து ரூபாய் சுற்றுலாக் கட்டணம் தின்பண்டங்கள் வாங்குவதற்கு ஐந்து ரூபாய் என பத்து ரூபாய் கட்டணத்தில் மதுரைக்கு சுற்றுலா சென்றது என் மனதில் மங்கிய காட்சிகளாக சிலவும், அழுத்தமான காட்சிகளாக சிலவும் நினைவில் இன்றும் இருக்கிறது இருக்கிறது.

திருமலை நாயக்கர் மஹால், 'இங்கதான் பெரிய அரசர் வாழ்ந்தார் நம்ம கிளாஸ்ல படிச்சிருக்கோம்ல புக்குல அது மாதிரி' என்று சொல்லிவிட்டு காந்தி மண்டபத்திற்கு சென்று காந்தியடிகளை சுட்டுக் கொன்ற போது அவர் அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த‌ வேஷ்டியை காண்பித்ததும் நினைவில் இருக்கிறது. கடைசியாக வாங்க வேகமா போகணும் என்று எங்களை வேகமாக அந்த வேனில் ஏற்றிக்கொண்டு மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.‌ அப்போது தூரத்திலிருந்து அங்கே ஒரு விமானம் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பது சிறிதாக தெரிந்தது, கொஞ்சம் லேட்டா வந்திருந்தா இந்த பிளைட் கிளம்பி இருக்கும் என்று மிஸ் சொன்னார், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது பிளைட் பாத்தீங்களா நீங்களும் பெரிய பசங்களாகி இதுல பறக்கணும் என்று சொல்லிவிட்டு நிறைய தின்பண்டங்கள் வாங்கித் தந்தார், சாப்பிட்டுவிட்டு இரவு ஊருக்கு திரும்பினோம்.‌‌

இப்படி ஜூலியா மிஸ் எப்போதும் ஆக்டிவாக வகுப்பை வைத்திருந்தார்.‌ ஒருநாள் ஆரம்பப் பள்ளி முடிந்து நான் அருகில் உள்ள ஊரில் ஆறாம் வகுப்பு சேர்ந்து விட்டேன். ஜூலியா மிஸ்ஸை கடைசியாக அவர் பஸ் ஏறுவதற்கு பள்ளிக்கு அருகில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்ததை மட்டும்தான் பார்த்த நினைவு, அந்த ஆண்டே அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார்.‌ ஆனால் மிஸ் என் நினைவுகளில் அடிக்கடி வந்து கொண்டே இருந்தார். ஆறாம் வகுப்பில் கணக்கு பாடம் மிகவும் கஷ்டமாக இருந்தது அப்போது ஜூலியா மிஸ்ஸை நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு மிஸ் வந்து இந்த கணக்கை எளிதாக சொல்லித் தர மாட்டார்களா என்று.


காலங்கள் உருண்டோடி கடைசியில் ஜூலியா மிஸ் எங்கிருக்கிறார், எந்த ஊரில் என்ன செய்கிறார் என்று எதுவும் எனக்கு தெரியவேயில்லை. யாரிடம் கேட்பது என்றும் புரியவில்லை. பிறகு பள்ளி முடித்து கல்லூரி முடித்து ஐஏஎஸ் தேர்விற்கு தயாரான போதும் இந்த மிஸ்ஸை நினைத்திருக்கிறேன். என்னை பாதித்த உருவாக்கிய சில நல்லாசிரியர்களில் ஜூலியா மிஸ் தான் லிஸ்டில் முதல் இடம்.

ஒரு நாள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆன பிறகு என் ஆசிரியர்களை எல்லாம் சென்று பார்த்தேன். அதில் ஜூலியா மிஸ்ஸை மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. பல ஆண்டுகள் கழித்து பின்னொரு நாள் அவரை சந்தித்தேன், சினிமாக் கதைகளின் சுவாரசியத்தைப் போலிருக்கும் அவரை நான் சந்தித்தது. சிலப்பதிகாரத்தில் காப்பிய முதன்மைக் கதையைவிட சில கிளைக் கதைகள்‌ இன்னும் சுவாரசியமாக இருப்பதைப் போல், அவரை சந்தித்த ஆச்சரியமூட்டும் ‌அந்த கிளைக் கதையை நான் சொல்லியாக வேண்டும்.

ஒரு நாள் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ‌திரு நடராஜன் அவர்கள் என்னை பல்கலைக்கழகத்திற்கு போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் பேச அழைத்திருந்தார்.‌ அந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவர் என்னிடம் 'நீங்கள் பள்ளிலிருந்து நன்றாக படிப்பீர்களா' என்று கேட்டார் அதற்கு பதில் சொல்லும் போது எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தான் ஏற்படுத்தினார் என்று ஜூலியா மிஸ்ஸின் பெயரைச் சொல்லி குறிப்பிட்டு பதில் சொன்னேன்.

அந்த நிகழ்ச்சி முடிந்தபின் அங்கு படித்த முதலாம் ஆண்டு மாணவன் வந்து, சார் நீங்கள் குறிப்பிட்ட ஜூலியா மிஸ்ஸின் மகன் தான் நான், இங்கு தான் படிக்கிறேன் என்று சொன்னவுடன் எனக்கு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஆக இருந்தது. அதன் பிறகு ஜுலியா மிஸ்ஸை வீட்டிற்கு சென்று சந்தித்தேன். பிறகு தொலைக்காட்சியிலோ செய்திகளிலோ என்னை பார்த்தால்‌ குறுஞ்செய்தி அனுப்புவார் எப்போதாவது பேசுவார்.


ஜூலியா மிஸ் கடந்த வாரம் போனில் அழைத்து தம்பி நான் மாணவர்களை அப்போதிருந்து இப்போது வரை எங்காவது சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பேன். வெளியிடங்களை பார்க்கின்ற போது அவர்களுக்கு ஒரு உத்வேகமும் நம்மைச் சுற்றி என்னென்ன நடக்கிறது, நாம் எதிர்காலத்தில் எப்படி உருவாக வேண்டும் என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வார்கள், இப்போதும் மதுரை விமான நிலையத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறேன், நீ‌ இப்ப கலெக்டரா இருக்கிறதுனால, சொல்லி கொஞ்சம் உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி வாங்கி தர முடியுமா என்று கேட்டார். விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி வேண்டுகோள் விடுத்தவுடன் அனுமதி தந்தார்கள்.

ஜூலியா மிஸ் மாணவர்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அன்று, நானும் உத்தரகாண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி அகாடமியில் உரையாற்ற‌ச் செல்வதற்காக விமான நிலையம் வந்தேன். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலியா மிஸ்ஸை அதே விமான நிலையத்தில் பார்த்தேன்.‌‌ விமான நிலைய அதிகாரிகளிடம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக இதே விமான நிலையத்திற்கு சிறுவனாக என்னை இந்த டீச்சர் தான் அழைத்து வந்தார் என்று சொன்னவுடன் மிகுந்த ஆச்சரியமாக டீச்சரை பாராட்டினார்கள்.

பல இலக்கிய படைப்புகளில் காலம் ஆச்சரியமானது,இனிமையானது அபூர்வ தருணங்களைத் தரவல்லது என்று பல கவித்துவமான புனைவு எழுத்துக்களில் வருவதைப் போல் நடந்த இந்த நிகழ்வு மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது.

ஜூலியா மிஸ் தனிப்பட்ட வாழ்வில் நிறைய நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சந்தித்தவர். ஆனால் தான் விரும்பிய ஆசிரியப் பணியில் மாணவர்களை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் நடக்க வேண்டுமோ அதற்குரிய நாற்றங்காலாய் மாணவப் பருவத்தை பயன்படுத்துவதையும் பக்குவப்படுத்துவதையும் மிகுந்த மெனக்கெடலோடு செய்பவர்.

புறநானூற்றில் சொன்னதைப்போல 'தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்" உள்ளதால் தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது.‌ ஜூலியா மிஸ்ஸை போன்ற ஆசிரியர்கள் தான்‌ ஏழை எளிய கிராமத்து குழந்தைகளையும், முதல் தலைமுறையாக பள்ளி கல்லூரிகளில் படிக்க வருபவர்களையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

யார் சிறந்த ஆசிரியர் என்று கேள்விக்கு நிறைய பதில் இருக்கலாம் ஆனால் 'கற்கும் விருப்பத்தை தோற்றுவிப்பவரே' சிறந்த ஆசிரியர் என்பேன் நான்.‌ எங்கள் ஜூலியா மிஸ் சிறந்த ஆசிரியர் !

இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும்போது விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறப்பதாக விமானி அறிவிக்கிறார், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலியா மிஸ் மதுரைக்கு அழைத்துச் சென்று காட்டிய போது தூரத்தில் ஓடுதளத்தில் ஓடிய விமானம் இன்று மேலெழும்பி 30 ஆயிரம் அடி உயரத்தில் என் மனதில் பறக்கிறது...." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive