அனைத்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளிலும் ஹைடெக் லேப் வசதி உள்ளது. உயர்நிலை பள்ளி லேப்பில் 10, மேல்நிலை லேப்பில் 20 கம்ப்யூட்டர்கள் உள்ளன.
எமிஸ் பதிவுகள், ஆன்லைன் வினாடி வினா தேர்வு, வேலை வாய்ப்பு நிகழ்ச்சிகள் (கேரியர் கைடன்ஸ்), நான் முதல்வன் திட்டம், யூடியூப் லிங்க் மூலம் கற்பித்தல், மொழி ஆய்வகம் (லாங்வேஜ் லேப்) உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் ஹைடெக் லேப்களில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன.
இதனால் மின் கட்டணம், இணையதள பயன்பாட்டு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் இத்திட்டங்களை செயல்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
திட்டங்களை ஏற்படுத்துவது ஒரு அதிகாரியாகவும், அதை செயல்படுத்த உத்தரவிடுவது மற்றொரு அதிகாரியாகவும் இருப்பதால், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்களை செயல்படுத்த கட்டாயப்படுத்துவதால் தான் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப்களை 24 மணிநேரம் தயாராக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளி தோறும் மொழி ஆய்வகம் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வல்லுநர்கள் பேசுவதை மாணவர்கள் 'ஹெட்போன்' அணிந்து கேட்க வேண்டும்.
ஒரு பள்ளிக்கு பத்து தான் வழங்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளில் அந்த நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல்வேறு செயல்பாடுகள் மூலம் இணையதள பயன்பாடு, மின்கட்டணமும் எகிறுகிறது. மூன்று மாதமாக மின் கட்டணத்தை அரசு வழங்கவில்லை.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத சில திட்டங்களை ஒருங்கிணைந்த கல்வித்திட்ட அதிகாரிகள் உருவாக்குகின்றனர். நடைமுறை சிரமங்கள் இருந்தாலும் அதை செயல்படுத்த கல்வித்துறை இயக்குநர் உத்தரவிடுகிறார்.
துறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கள நிலவரத்தில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும் என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...