கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'டிட்டோஜாக்' 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மூன்று நாட்களாக நடத்தினர்.
சென்னைக்கு வரவிடாமல் தடுத்து ஆங்காங்கே போலீஸ் கைது செய்ததால், நேற்று தமிழகம் முழுதும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களை முற்றுகையிட சென்றனர்.
சென்னையிலும் 3,000க்கும் மேற்பட்டோர் டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட சென்றனர். மாநிலம் முழுதும் நேற்று 15,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
முந்தைய இரு நாட்களில் நடந்ததை போலவே, மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் பலருக்கு, ஓய்வு பெறும் வயதில் தான் தலைமை ஆசிரியராகும் வாய்ப்பு கிடைக்கிறது. அதுவும் பணிபுரியும் ஒன்றியத்தில் கிடைக்காமல், தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்ல வேண்டும் என, புதிய அரசாணை கூறுகிறது.
இதனால் மூத்த ஆசிரியர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். கற்பிக்கும் பணியும் பாதிக்கப்படுகிறது.
ஓய்வு பெறும் வயதில் நிம்மதியாக பணியாற்றும் வகையில், அந்தந்த ஒன்றியத்தில் உள்ள பள்ளியில் பதவி உயர்வும், ஓய்வும் வழங்க வேண்டும் என்பது எங்களின் முக்கிய கோரிக்கை.
அத்துடன் நீண்ட நாள் கோரிக்கைகளான, மத்தியஅரசுக்கு இணையான ஊதியம் வேண்டும். பிடிக்கப்பட்ட ஒப்படைப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகிறோம்.
துறை செயலர் எங்களை அழைத்து, 'ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள்; முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம்' என உறுதி அளித்தார். அதை ஏற்று, ஒரு மாதம் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...