பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில் அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஜூலை 1 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் பெற்றனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசுப் பள்ளிகளில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 892, திருவண்ணாமலையில் 720, திருப்பூரில் 500, தருமபுரியில் 413, புதுக்கோட்டையில் 379, சேலத்தில் 289 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அதேசமயம் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை. இதேபோல், அரசுப் பள்ளிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2,600-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஒட்டுமொத்தமாக தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...