தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 25 முதல் 30 துறைகளில் எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
அந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு தமிழக அரசின் மருத்துவக்
கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இதில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 % இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 50 சதவீத இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கும் 50 % இடங்களில் 50 % எம்பிபிஎஸ் முடித்துஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 50 % இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அரசு மருத்துவர்கள் ஒதுக்கீட்டில் அனைத்து துறைகளின் எம்டி, எம்எஸ் படிப்புகள் இடம்பெற்று இருக்கும்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் வெளியிட்ட அரசாணையில், “முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு இடங்களில் 50 % அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இனிமேல், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம், மகப்பேறு, சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுநிலை படிப்புகள் மட்டும்தான் இடம்பெறும். அதில், ஒன்றை தான் தேர்வு செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து சுமார் 15 துறைகளின் படிப்புகளை எடுத்துவிட்டனர். இந்த படிப்புகளை படிக்கும் அரசு மருத்துவர்களுக்கு பணியாற்ற போதிய இடங்கள் இல்லை என்கின்றனர்.
இந்த படிப்புகளை இனிமேல் அரசு மருத்துவர்கள் படிக்க வேண்டும் என்றால் பொது கலந்தாய்வில் பங்கேற்றுதான் படிக்க முடியும். பொது கலந்தாய்வில் அரசு சாரா தனியார் மருத்துவர்கள்தான் அதிக அளவில் பங்கேற்பார்கள். தயவு செய்து தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டாம். அதனால், இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...