கரூர் மாவட்டம் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் திருமணம் செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திருமணம் செய்த மாணவர் மற்றும் உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை குழு பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி மகள் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 29ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி சிறுமி அதிகாலையில் பார்த்த போது காணவில்லை என பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் காணாமல் போன சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி சீருடையில் அச்சிறுமியை, பள்ளி சிறுவன் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை கண்ட சிறுமியின் உறவினர்கள் திருமணம் செய்து கொண்ட மாணவன் மற்றும் உடந்தையாக இருந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோகைமலை காவல் நிலையத்தில் புகார் விடுத்தனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம், பள்ளி வளாகத்தில் திருமணம் செய்த சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலைமை ஆசிரியர் இதுகுறித்து விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.
இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் திருமணம் செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திருமணம் செய்த மாணவர் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை குழு பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...