வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் மத்திய பட்ஜெட்டில் செய்யப்படவில்லை.
பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை உரையின் பின்பாதியில் வெளியிட்டார். நியூ ரெஜீம் எனப்படும் புதிய வரிமுறையை, பின்பற்றுவர்களுக்கு வருமான வரி விகிதத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள் என்றார்.
புதிய வரி முறையை பின்பற்றுவோருக்கு, ரூ. 3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு - வரி இல்லை, ரூ.3 - 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு - 5% வரி, ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10% வரி, ரூ. 10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15% வரி, ரூ. 12 முதல் - 15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20%, ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்படும் என வரி விகிதங்களை அவர் அறிவித்தார். நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்:
மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
வேளாண் துறை: வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயிகளை ஈடுபட்டுத்தத் திட்டம்.
வேளாண் துறையை டிஜிட்டல்மயமாக்க கவனம் செலுத்தப்படும்.
கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்.
கல்வி: மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்படும்.புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர்.
ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிஹார் மாநிலத்தில் ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும். மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறாக அமைப்பதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும்.
முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம்.
நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் அமைக்கப்படும்.
ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
தொழிலாளர்களுக்கான தங்கும் இடம் வசதி அரசு - தனியார் பங்களிப்பில் உருவாக்கப்படும்.
நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் ஒருமுறை உதவியாக இளைஞர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படும்.
நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
தொழில் நிறுவனங்களுக்கு புதிய தீர்ப்பாயம் உருவாக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்.
30 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட 14 பெருநகரங்களில் பொதுப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் அரசு சார்பில் 100 சாலையோர உணவு மையங்களை உருவாக்கப்படும்.
பிரதமரின் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா (PM Surya Ghar Muft Bijli ) திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் சூரிய மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
அசாம் மாநிலத்தில் வெள்ள மேலாண்மை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு.
பிரதமரின் கிராம சாலை திட்டம் 4-ன் கீழ் எல்லா காலநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 கிராமப் பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்.
விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக வைக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
> நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர்.
வரிச் சலுகைகள்: புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.
வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது.
தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
வருமான வரி செலுத்துவோரில் 3-ல் 2 மடங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது.
டிடிஎஸ் தாக்கலில் நிகழும் தாமதம் இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.
அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது.
வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்: புதிய வரிவிதிப்பு முறையில், தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடிக்ஷன்) ரூ.50,000-ல் இருந்து இருந்து ரூ.75,000 ஆக உயர்வு. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்.
முன்னதாக, புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு. அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவு சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...