இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் இன்று வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே 2022 ஜூலை மாதம் முதல் 2024 மே மாதம் வரை 16 பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக் கிழமைகளில் நடத்தப்பட்டன. அதில், கற்றல், சேர்க்கை, மேலாண்மை தொடர்பாக 3 லட்சத்து 71,729 தீர்மானங்கள் குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு அதில் 75,863 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், அரசின் பிற துறைகளால் 8,311 தீர்மானங்களும் செய்து தரப்பட்டுள்ளன. இதற்கிடையே ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் ஜூலை மாதத்தில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும். அதனுடன், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.
அதில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலராக இருப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...