இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியில் விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு அதன் மூலம் சமூக மேம்பாட்டை உயர்த்தவும், மாவட்டத்துக்குள் கல்வி நிலப்பரப்பை முறையாக மேம்படுத்தவும் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாவட்ட அளவில் பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆராய மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வுக் கூட்டங்களை போல் மாவட்ட கல்வி மதிப்பாய்வும் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும்.
இதன்மூலம் எதிர்காலத்தின் கல்வி தேவைகளை மாற்றியமைக்கும் விதமாக மேம்படுத்துவதை உறுதிசெய்ய முடியும். மதிப்பாய்வு என்பது பள்ளிகளில் தேவையான வசதிகளை உருவாக்குதல், அடிப்படை வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான போக்குவரத்து, சத்துணவுத் திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பள்ளிகளில் கற்பித்தல் முறைகள், மாணவர்களின் செயல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதுதவிர மாணவர் சேர்க்கை, பள்ளிக்கு மாணவர்களின் வருகை கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்களின் செயல்பாட்டையும் கண்காணிக்க வேண்டும். மேலும், மாவட்டக் கல்வி மதிப்பாய்வை அவ்வப்போது நடத்த வேண்டும். இதன்மூலம் கல்வி முறை மற்றும் அதன் தரம் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...