பிடிஐ நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவா் கூறியதாவது: பெற்றோா் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகின்றனா். தற்போது அரசுப் பள்ளிகளின் தரம் உயா்த்தப்பட்டு சிறப்பான கல்வி கற்றுத் தரப்படுகிறது. இருப்பினும், முறையான பயிற்சிகூட பெறாத பல ஆசிரியா்களைக்கொண்ட ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது.
அவா்களின் இந்த மனநிலையை மாற்றி தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கவே புதிய தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்மொழிக் கல்வியே சிறந்தது: தாய்மொழியில் கல்வி கற்கவில்லை என்றால் நமது பாரம்பரியம், கலாசார வோ்களை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? அதேபோல் பல மொழிகளைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுவதால் எந்தவொரு மொழியில் கல்வி கற்பிக்கும் நடைமுறையும் முடிவுக்கு வராது. மாணவா்கள் பல்வேறு மொழிகளைக் கற்பதற்காகவே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழங்குடியின மொழியிலும் கல்வி: ஒடிஸா மாநிலத்தின் இரு பழங்குடியின மொழிகளில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் புகைப்படங்கள், கதைகள் மற்றும் பாடல்கள் வடிவில் அவா்கள் வசிக்கும் இயற்கைச் சூழலை தொடா்புபடுத்தி கற்கும் திறனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைப்போலவே 121 மொழிகளில் புத்தகங்கள் தயாா் செய்யப்பட்டு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் தங்களின் கலாசார வோ்களை அவா்கள் அறிந்துகொள்ள முடியும்.
தாய்மொழிக்கல்வியை விட்டுவிட்டு ஆங்கில வழிக்கல்வியை மட்டுமே சாா்ந்திருந்ததால் அறிவை இழக்கும் சூழல் ஏற்பட்டது. தற்போது பலமொழிக்கல்வி மூலம் மீண்டும் நமது பாரம்பரியம் நிலைநிறுத்தப்படவுள்ளது என்றாா்.
தேசியக் கல்விக் கொள்கை, 2020-இன்படி 5-ஆம் வகுப்புவரை தாய்மொழி, பிராந்திய மொழி அல்லது உள்ளூா் மொழிகளில் கல்வி கற்பிக்கும் முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேலும்கூட தாய்மொழிக்கல்வியில் பாடங்கள் கற்பிக்கவும் புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தாய்மொழியில் கல்வி கற்பதே சமூக நீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய முன்னெடுப்பு என பிரதமா் மோடி கடந்தாண்டு தெரிவித்திருந்தாா்.
எதிா்க்கட்சிகள் விமா்சனம்: கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி (என்சிஎஃப்) 9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 2 இந்திய மொழிகள் உள்பட கண்டிப்பாக 3 மொழிப் பாடங்களை படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் 11,12-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு இந்திய மொழியுடன் மற்றொரு மொழிப் பாடத்தையும் தோ்ந்தெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு மொழியை திணிப்பதுபோல் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மத்திய கல்வி அமைச்சகம் மறுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிகளும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்பு எப்படி நடை பெறுகிறது என்று தெரியவில்லை. 10ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களின் பாடு தான் ஆங்கில வழியில் கவலைக்கிடம். அர்த்தம் புரியாமல் ஒரு பாஸ். வினாத்தாள் வேறு மிக கடினம். 100 சதவீத தேர்ச்சி டென்ஷன். ஆசிரியர் பணி செய்ய வரும் காலங்களில் ஆசிரியர் கிடைக்க மாட்டார்கள்.
ReplyDelete