தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பாடப் புத்தகங்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்படுகின்றன. அவை தமிழக பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையே பள்ளிக்கல்வி பாடநூல்களில் ஆண்டுதோறும் சிறிய அளவிலான பிழைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், நடப்பு கல்வியாண்டில் (2024-25) வழங்கப்பட்ட 9, 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சில திருத்தங்கள் இருப்பதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், "9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வரலாறு பிரிவில் தொழிற்புரட்சி காலத்தில் முக்கிய கண்டுபிடிப்புகள் பத்தியில், கம்பியில்லா தகவல் தொடர்பை தாமஸ் ஆல்வா எடிசனும், ஒளிரும் மின்விளக்கை மார்கோனியும் கண்டுபிடித்ததாக தவறாக இருக்கிறது. அதை கம்பியில்லா தகவல் தொடர்பை மார்கோனியும், ஒளிரும் மின்விளக்கை தாமஸ் ஆல்வா எடிசனும் என்று திருத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், 9-ம் வகுப்பு சமூக அறிவியலில் பொருளியல் பிரிவில் பணம் மற்றும் கடன் பத்தியில் 2-வது பத்தி முழுவதையும் நீக்க வேண்டும். இதுதவிர நடப்பாண்டில் 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் கருணாநிதி மறைந்த தேதியை ஜூலை 7-ம் தேதி என்று தவறாக பதிவிட்டுள்ளனர். அதை ஆகஸ்ட் 7-ம் தேதி என திருத்தம் செய்து கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...