"நீட் தேர்வெழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறைக்கால அமர்வில் பாண்டே தரப்பில் வழக்குரைஞர் ஜே.சாய் தீபக் என்பவர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். அந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு அறிவுறுத்தினர்.
இதுகுறித்து வழக்குரைஞர் சாய் தீபக் கூறுகையில், "நீட் தேர்வு குளறுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாண்டே மனு அவற்றிலிருந்து சற்று மாறுபட்டது. இதில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த மனு உள்பட நீட் தேர்வுக்கு எதிராக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மேலும் இரண்டு மனுக்களை வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு குளறுபடியை சுட்டிக்காட்டியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, "நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டு, அந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, என்டிஏ மற்றும் பிகார் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும் அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான மனுக்களுடன் விசாரணைக்கு இணைத்து உத்தரவிட்டனர். அதன்படி, அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
உயர்நீதிமன்ற மனுக்களையும் ஒன்றாக விசாரிக்கக் கோரும் என்டிஏ
நீட் குளறுபடி தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இத் தகவலை தில்லி உயர்நீதிமன்றத்தில் என்டிஏ தரப்பு வழக்குரைஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புதன்கிழமை தெரிவித்தார்.
நிகழாண்டு நீட் வினாத் தாள் கசிவு, ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு என்டிஏ தன்னிச்சையாக கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா தலைமையிலான கோடை விடுமுறைக்கால அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது என்டிஏ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், உயர்நீதிமன்றங்கள் வெவ்வேறு விதமான தீர்ப்பை வழங்கினால், பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் என்டிஏ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. இதற்கு 2 வாரங்கள் வரை அவகாசம் தேவைப்படும்' என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 5-ஆம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டார். மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவைப் பின்பற்றி, கலந்தாய்வுக்கு இடைக்கால தடைவிதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...