கல்வித் துறை அரசாணை எண் 250 நாள் 29.02.64-ன்படி, தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளிலிருந்தே 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார்கள். 20 குழந்தைகளுக்கு மிகாமல் ஓர் வகுப்பு என்ற நிலை அப்போது இருந்தது. 33 ஆண்டுகளாக இருந்த நடைமுறை அரசாணை எண் 525 பள்ளிக் கல்வித் துறை நாள் 27.12.1997-ன்படி 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமனம் என்று மாற்றப்பட்டது. இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என தெரிந்தும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1998ஆம் ஆண்டு ஐந்தாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறைக்கு வந்த பிறகு தொடக்கப் பள்ளிகளில் 30 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர், நடுநிலைப் பள்ளிகளில் 35 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார்கள். இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தனியார் கட்டணப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உபரி ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறையின் படி 25% சதவீத வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவுற்ற பிரிவுக் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய கல்வி உரிமைச் சட்டமே காரணமாக அமைந்துள்ளது.
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். சட்ட திருத்தம் செய்வதற்கு மாநில அரசுகள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். ஆனால் இது நடப்பது குதிரைக் கொம்பு என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போதுள்ள 30 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற நடைமுறைப்படி 60 குழந்தைகள் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஏழைக் குழந்தைகளுக்கு தரமான கல்வி எப்படி கிடைக்கும்? அரசு பள்ளிக் குழந்தைகள் பெறும் கல்வி வாய்ப்பும் தனியார் பள்ளி குழந்தைகள் பெறும் கல்வி வாய்ப்பும் சமமாக இருக்குமா?
தமிழ்நாட்டில் 1997 வரை இருந்ததைப் போல 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமித்தால் உபரி ஆசிரியர் என்ற நிலை இருக்காது. இதன் மூலம் 41 முதல் 60 குழந்தைகள் படிக்கும் ஒரு தொடக்கப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கும். ஈராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இதைச் செய்வதற்கு கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யத் தேவையில்லை. ஏழைக் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை இருந்தால் போதும்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ள சமத்துவ நீதியை கல்வியில் உறுதி செய்ய வேண்டாமா? தரமான கல்வியை உறுதி செய்வது முக்கியமா? கல்விச்செலவை குறைப்பது முக்கியமா?
ஏழைக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.
சு.மூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
(குழந்தைகளின் கல்வி நலனைக் கருதி செய்தியை வெளியிட்ட இந்து தமிழ் திசை நாளிதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...