சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக பாடப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில் என்சிஇஆர்டியின் பெயரில் போலி பாடப்புத்தகங்கள் நடமாட்டம் இருப்பதாக அதற்கு புகார்கள் வந்தன.
அதுகுறித்து விசாரணை நடத்தியபோது சில தனியார் நிறுவனங்கள் என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள பாடங்களை அப்படியே நகலெடுத்து தங்கள் பெயரில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதனால் என்சிஇஆர்டி தரப்பில் இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "என்சிஇஆர்டி இணையதளத்தில் காணப்படும் பாடப்புத்தகங்களை சில வெளியீட்டாளர்கள் அனுமதியின்றி தங்கள் பெயரைப் போட்டு அச்சிட்டு வருகிறார்கள். அப்படி எங்கள் பாடப்புத்தகங்களை முழுமையாகவோ, பகுதியாகவோ அச்சிட்டு விற்பனை செய்பவர்கள், முறையான பதிப்புரிமை அனுமதி பெறாமல், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்தை தங்களது பதிப்புகளில் பயன்படுத்துபவர்கள் ஆகியோர் பதிப்புரிமை சட்டத்தை மீறியவர்களாவார்கள்.
அவர்கள் மீது பதிப்புரிமை சட்டத்தின்கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், இத்தகைய போலி பாடப்புத்தகங்களில் உள்ளடக்கம் தவறாக இருக்கலாம். ஆகவே, பொதுமக்கள் இத்தகைய போலி புத்தகங்களை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். யாரேனும் இந்த போலி புத்தகங்களையோ, ஒர்க்புக்கையோ கண்டால், அதுகுறித்து உடனடியாக என்சிஇஆர்டிக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று என்சிஇஆர்டி அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...