Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும்” - முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்

1224386

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் காலம் கனியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த நேர்காணலில் கூறியதாவது:

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து...

ஜனநாயக நெறிமுறைகள், அரசியல் சட்ட மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால் சிறைபட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே நடத்தும் மாநில உரிமைக்கான போராட்டத்தை மதிக்கிறேன். நீதி அவர் பக்கம் நிற்கும் என நம்புகிறேன்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. அவ்வாறு வெற்றி பெற்ற 39 எம்.பி.க்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது. மீண்டும் இதேபோன்ற நிலை உருவானால், உங்கள் வெற்றியின் பலன் எவ்வாறாக இருக்கும்?

மீண்டும் அதே நிலை உருவாகாது. இண்டியா கூட்டணி ஆட்சி அமையும். எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளை செயல்படுத்திக் காட்டுவோம். கடந்த 5 ஆண்டு காலத்தில் பாஜகவுக்கு மிகச் சரியான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகார சட்டங்கள் அனைத்தையும் கடுமையாக எதிர்த்துள்ளோம். எதேச்சதிகார செயல்கள் அனைத்தையும் மிக கடுமையாக அம்பலப்படுத்தி உள்ளோம்.

மாநில உரிமைகளுக்காக உரக்க ஒலித்துள்ளோம். ஒற்றை சர்வாதிகார நாடாக ஆக்க நினைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்துள்ளோம். இதே சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி போராடி இருக்கிறோம். திமுக உறுப்பினர்களின் சிந்தனையால்தான் இண்டியா கூட்டணியே கொள்கை கூட்டணியாக உருவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், வெற்றி வசமானால் உங்களிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கலாம்?

வெற்றியை மக்கள் எங்களுக்கு முழுமையாக வழங்குவார்கள். நாங்கள் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவோம்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மாற்றுக் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் செய்கின்றனர். இதை மாற்ற என்ன முயற்சி எடுப்பீர்கள்?

ஆளுநர் என்பது நியமன பதவியே தவிர, அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப் பதவி கிடையாது. ஆளுநர்கள் மூலமாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அத்துமீறுவதும், போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பதும் அரசியல்சட்டத்தை மீறும் செயலாகும். அதனால்தான், ஆளுநர் என்கிற நியமனப் பதவியே தேவையில்லை என்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞர் காலத்திலும் தற்போதும் திமுகவின் நிலைப்பாடு. ஆனால், நடைமுறையில் ஆளுநர் பதவி நீடித்துவரும் நிலையில், ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில முதல்வர்களின் ஆலோசனைகளை பெற்று நியமிக்க புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மாநில ஆளுநர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநர் சட்டநடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும்போது ஆளுநர்களின் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாக மட்டுமே இருப்பதை பார்க்க முடிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த கோரிக்கை நிறைவேறுவது சாத்தியமா?

நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்குவோம். பயிற்சி மையங்கள் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இதுதான் உண்மை. நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கிறது. அதனால் அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கக் கோரி சட்டமுன்வடிவு இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளை கவனிக்கும் மற்ற மாநிலங்களும் இதிலிருந்து விலக்குப் பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இது உங்கள் தேர்தல் வெற்றியை பாதிக்காதா?

சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என உத்தரவாதம் அளித்திருக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆட்சி சக்கரத்தை இயக்கக்கூடியவர்கள். அவர்கள் இந்த அரசு எந்தளவு நிதி நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டுவருகிறது என்பதை அறிவார்கள்.

மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டதன் விளைவாக மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுபோல, நிதி நெருக்கடி இன்னும் சீராகும்போது மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். மத்திய அரசிலிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதி உரிய வகையில் கிடைக்கின்ற காலம் கனிய இருப்பதால் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேறும் காலம் கனியும்.

இந்த முறை மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே. சில குறிப்பிட்ட சமூகத்துக்கு இடம் தரவில்லை என்கிறார்களே?

அனுபவம் கொண்ட மூத்தவர்களும், அறிமுகமாகும் இளைஞர்களும் இணைந்த வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதுபோல அனைத்து சமுதாயத்தினருக்குமான பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கே இடமிருக்காது. சில தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்கும் சூழலும் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.

உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டேன்’ என்று துரை வைகோ பேசியுள்ளார். உதயசூரியன் சின்னத்தில் நிற்கவேண்டும் என்று திமுக சார்பில் அவருக்கு அழுத்தம் தரப்பட்டதா?

தனி சின்னத்தில் நிற்பதாகவே தொகுதிப் பங்கீட்டின் போதும் மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'தீப்பெட்டி' சின்னத்தில் துரை வைகோ நிற்கிறார். எனவே, திமுக எந்த அழுத்தமும் தரவில்லை என்பதை நீங்கள் அறியலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive