வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள் தொடர் -7
தீபக் எனும் மகான்
மன்னிப்பு மனித வாழ்வியலில் மிகப் பெரிய சொல்லாகும். அதிலும் உடனடி மன்னிப்பு என்பது அதில் ஆகச் சிறந்த சொல் என்பர். இந்த சொற்களின் உண்மையான பொருள் புரியாத எத்தனையோ ஆசிரியர்கள் இங்குள்ளனர். ஐம்பது வயதைக் கடந்த நிலையிலும் உப்புச் சப்பில்லாத, ஒன்றுக்கும் உபயோகப்படாத, தக்க காரணமே இல்லாத எளிதில் அணைந்து விடும் சினத்தை இப்போதும் பெரும் மூட்டைக்கட்டிக் கொண்டு வன்மமாக வளர்ந்து கிடப்பது இங்கு பல பேரிடம் காண முடியும்.
நாம் வாழும் இந்த பூமியில் எத்தனையோ விதமான குணங்கள் நிறைந்த மனிதர்கள் நிறைந்துள்ளனர். அவர்களுள் பலர் கூடவே வாழ்கின்றனர். அல்லது எதிரில் நிற்கின்றனர். வேண்டுமென்றே வெறுப்பு அரசியலை விதைத்து மனிதக் கூட்டத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் கயமைக் கும்பலில் மிகுந்த சகிப்புத்தன்மையும் சக மனிதர்களை மன்னிக்கும் மனநிலையும் அதிகம் நிரம்பியவர்களாக ஆசிரியர் பெருமக்கள் இருக்க வேண்டும் என்பது மானுட நீதியாகும். ஆனால், நடப்பு மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பது தான் வேதனைக்குரியது.எத்தகைய துன்பம் நேரினும் அன்பும் கருணையும் கொண்டவர்கள் ஆசிரியர்கள். மாறாக, மாணவர்கள் குறும்பும் பிழையும் நிரம்பியவர்கள். கல்வி ஒன்றே இருவேறு இணைகோடுகளை இணைக்க வல்ல தொடர்வண்டியாக உள்ளது. ஆசிரியர்கள் மேற்கொண்ட கண்டிப்பு மற்றும் தண்டிப்பு ஒருவித எல்லைக் கடந்த நிலையில் மூன்றாம் நபராக விளங்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் பாதிக்கப்பட்டோர் பக்கம் நின்று கேள்விக் கேட்கும் சூழல் சிலநேரங்களில் வகுப்பறைகளில் அமைந்து விடுவதுண்டு. தம் தரப்பு அநியாயத்தை உணராமல் இதற்கு காரணமான தம்மால் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளிடம் தொடர்ந்து காட்டிவரும் வன்மபுத்தி படைத்த ஆசிரியர்களும் பலர் இங்குள்ளனர். இது மிகையல்ல.
ஆசிரியர்களைக் குறைத்து மதிப்பிடுவதும் அவர்களைக் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்திப் பார்ப்பதும் இங்கு நோக்கமல்ல. அதற்காக உண்மைநிலையை மறைப்பதும் நல்லதல்லவே? இந்த சமூகம் ஆசிரியர்களை நல்வாழ்விற்கு வழிகாட்டும் வாழும் கடவுளர்களாகத் தான் நோக்குகிறது. குழந்தைகள் குறைகுடமாகத்தான் எப்போதும் தழும்பிக் கொண்டிருப்பார்கள். ஆசிரியர்கள் தாம் நிறைகுடமாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்த முயன்று கொண்டே இருக்க வேண்டும். அதற்கு மன்னிப்பும் மறப்பதும் தக்க நெம்புகோல்கள் ஆகும். இஃது என் எண்ணம்.
"சார்! நேத்து ஒரு பிரச்சினை ஆயிட்டு!"
பஞ்சாயத்து வந்து விட்டது. பள்ளிகளில் இதனை அதிகம் காணவியலும். பைசாவுக்குப் பிரயோசனப்படாது. ஆனால், மலை போல் மூட்டைக்கட்டிக் கொண்டு வந்து அவிழ்த்து விடுவார்கள்.
"ஏன்? என்னாச்சு?!"
வாடிக்கையான ஒன்று தான். அதற்காக ஆச்சரியம் படாமல் இருக்க முடியாது அல்லவா?
"தீபக்கோட வூட்லேர்ந்து வந்து எங்க எல்லாரையும் ஒரே சத்தம் போட்டுட்டுப் போய்ட்டாங்க சார்!"குற்றப் பத்திரிகை வாசித்தனர். ஒருசேர. நேற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர்.
தீபக் ஒரு கருப்பழகன். பலமுறை அவனது துறுதுறு திராட்சை விழிகள் குறித்து பெருமையாக வகுப்பில் ஏனைய மாணவர்கள் மத்தியில் புகழ்வதும் உண்டு.
அதற்கு காரணம் படிப்பில் அவன் படுமோசம். இதை ஓர் ஆசிரியராக நான் சொல்லக் கூடாது. உங்கள் புரிதலுக்காக அப்படியொரு பிரயோகம். அவ்வளவு தான். அதாவது, இதுமாதிரி பிள்ளைகள் கல்வி அகராதியில் கற்றல் குறைபாடுகள் மிக்கவர்கள் என்று வரையறை செய்யும். அதாவது, நன்றாக வாசிப்பதில் குறைபாடு அவனுக்குள்ளது. அதன் காரணமாக, ஒழுங்காக எழுதுவதிலும் பிரச்சினைகள் இருந்தன.
இதுபோன்ற மாணவர்களை ஓரளவிற்கு படிக்கும் மாணவர்கள் சற்று ஒதுக்கி வைத்துப் பார்க்கும் வழக்கம் மாணவர் சமூகத்தில் இயல்பானதே. இதைக் களைவதிலும் ஆசிரியர் அவ்வப்போது தொடர்ந்து முன்முயற்சி எடுத்துக் கொண்டே வரவேண்டியது அவசியம். அதன் பொருட்டு, அதுபோன்ற மாணவர்களிடம் காணப்படும் கல்வி சாரா தனித்துவமான பண்புகளையும் திறமைகளையும் பொதுவில் வைத்துப் பாராட்டுவதும் இன்றியமையாதது.
கூட படிக்கும் சக மாணவர்கள் அவனிடம் காட்டிய கற்றல் சார்ந்த நவீனத் தீண்டாமையின் வடிவமாகக் காணப்படும் ஏளனம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவை தொடர்ச்சியாகத் திரைமறைவில் நடந்து வந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தினர். மேலும், ஒருவருக்கொருவர் உறவினர்கள். அதனால் இதனைச் சாதிய சிக்கலுக்குள் அடைத்து வைத்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.
மறுநாள் பள்ளித் தொடங்கியதும் இரண்டு தரப்பினரின் பெற்றோரும் முதல் வேலையாகப் பள்ளிக்கு நேரில் வந்து அவரவர் தரப்பு நியாயங்களை முன்வைத்துச் சென்றனர். பள்ளி நிர்வாகம் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது. அதன்பின் அங்கு புகைச்சலுமில்லை. நமைச்சலுமில்லை. ஆனாலும், மாணவர்களிடையே காணப்பட்ட நீறுபூத்த நெருப்பு இன்னும் அணையாமல் இருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. அதன்விளைவாக, இனி உன் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை என்பதாக இருந்தது. நேற்றைய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மனநிலை. தீபக்கும் செய்வதறியாது அவர்களிடையே நெளிந்தான். எனக்கு இதை இப்படியே விட்டு விட மனம் ஒப்பவில்லை. தனியாக இருவரையும் அழைத்தேன். இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர.
"தீபக்! இங்கு வா. என்ன நடந்துச்சு?"
"சார்! இவிங்க எப்பவும் என்னை ஸ்கூல் விட்டு போறப்ப வர்றப்ப கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காய்ங்க. நேத்து கூட என்னோட அக்காவோட ஸ்கூல் பேக்கை சைக்கிளில போறப்ப எனக்குத் தெரியாம கீழ விழுந்ததை எடுத்து ஒளிச்சு வச்சுட்டாய்க சார்"
கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது. கூடவே ஆத்திரமும் கொஞ்சம் எட்டிப் பார்த்தது.
எதிர்தரப்பை ஏறிட்டேன். அவர்களிடமிருந்து எந்த மறுப்பும் இல்லை. ஏனெனில், மாணவர்கள் மத்தியில் நான் அவர்களை எதிர்கொள்ளும் முதல்நாளிலேயே தவறை நேர்மையுடன் ஒத்துக் கொண்டால் அவர்கள் மன்னிக்கப் படுவார்கள் என்று கூறி வைத்துள்ளேன். அதன்படியும் நடந்து கொள்வேன். மேலும், என் முன் பொய் பேசி நீ நல்லவன் என்று நடிப்பதில் ஒரு புண்ணியமும் இல்லை. கூடவே, சத்தியம் செய்து அதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் உனக்கில்லை. என்னிடம் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் உண்மையான வார்த்தை உள்ளபடி தெரிவிக்கலாம் என்கிற எண்ணத்தை விதைத்ததோடு அல்லாமல் அதற்கான இடமும் வழங்கும் வழக்கம் இப்போதும் உண்டு. அதுதான் இப்போதும் வேலை செய்கிறது.
குழந்தைகளின் குறும்புத்தனம் சில சமயங்களில் எல்லை கடந்து விடுவதுண்டு. எல்லாவற்றையும் எளிதில் விளையாட்டாக எடுத்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. தீபக்கிற்கு அவன் அக்காள் மீது பாசம் மிகுதி. அவளது பொருள் மீதும் அது நீட்சியடைந்திருந்தது.
"ஏன்டா! அவனோட புத்தக மூட்டையை ஒளிச்சு வச்சுருந்தீங்கன்னா கூட இம்புட்டு பதறி இருக்க மாட்டான். அவன் அக்காவோடதை ஏன்டா எடுத்து ஒளிச்சு வச்சீங்க?!"
அங்கு கோலோச்சிய இறுக்கத்தை மெல்ல என் பேச்சு உடைத்ததில் அவர்களும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு மெதுவாக வந்திருந்தனர். ஒருவித நமுட்டுச் சிரிப்புடன்,
"அதுதான் சார் மொதல்ல கீழ வுழுந்துச்சு!"
என்றார்கள். பாவமாக.
"ஆமா சார்! என்னோடதுனா கூட வுட்ருப்பேன் சார். அக்காவோடதை எடுத்து ஆட்டம் காட்டிட்டாய்ங்க சார்!..."
பழைய கன்னக்குழி விழும் அழகு சிரிப்பும் சக நண்பர்கள் மீதான புதிய கோவமும் தீபக்கிடமிருந்து மாறிமாறி வெளிப்பட்டது.
"இதுக்குப் போயி கரைச்சலா செய்வே? "
"சாரி சார்!"
"இவிங்க யாரு ஒனக்கு?"
"ப்ரண்ட்ஸ் சார்!"
"டேய் ஒங்களுக்கு?"
"ப்ரண்ட் சார்!"
"அப்பறம் என்ன?"
"கட்டிப்புடிக்கணுமா சார்?"
"கேட்காத. செய்யி!"
"பரமு! நீயேன் இப்புடி ஏக்கமாப் பார்க்குறேனு தெரியுது? ஒனக்குக் குடுகுடு கெழவிதான்!"
வகுப்பே சிரிப்பலையில் கொஞ்சநேரம் மிதந்தது. பெண் பிள்ளைகள் அதை நினைத்து நினைத்து தமக்குள் சிரித்துக்கொண்டே இருக்க, பரமகுரு வெட்கத்தில் சிவந்தான். ஆண் பிள்ளைகள் படும் வெட்கமே ஒரு தனி அழகுதான். எல்லோரின் பார்வையும் அவன் பக்கம் திரும்ப_
"போங்க சார்!"
"சாரிடா குட்டி! ச்சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன். கோச்சுக்காதே!"
அதற்கும் அவனிடமிருந்து வந்த பதில்
"போங்க சார்."
எத்தனை கிச்சுக்கிச்சு மூட்டினாலும் மனக் குரங்கு சில பொழுதுகளில் புதிய சூழலில் கொஞ்ச நேரம் வாழ்ந்துவிட்டு மறுபடியும் பழைய வாழ்க்கைக்குச் சென்று விடும் தானே? அதுபோல் தான் அங்கும் சூழல் நிலவியது.
"தீபக்! சாயந்தரம் நீ ஸ்கூலைப் பூட்டுவதற்கு இவிங்களோட இருக்க வேணாம்.!"
சரி என்பது போல் தலையாட்டினான். விட்டு விடுதலையான உணர்வு அவனுக்குள். அது அவனது முகத்திலும் தென்பட்டது.
"டேய்! நீங்களும் அவன் இருக்கணும்னு நெனைக்காதீங்கடா! கொஞ்ச காலம் போவட்டும்."
இவர்களும் வேறுவழியின்றித் தலையாட்டினார்கள். மனத்திற்குள் மேலும் ஒரு சுமை கூடுகிறதே என்கிற கவலை வேறு தொற்றிக் கொண்டது.
பிரச்சினை ஒருவழியாக ஓய்ந்தது என்பதில் எல்லோர் முகத்திலும் மனத்திலும் மகிழ்ச்சி.
வழக்கம் போல் அன்றும் பள்ளி கடைசி மணி ஒலித்தது.
எல்லோரும் வீட்டிற்குப் போகத் தயாரான நிலையில் அப்போதுதான் கவனித்தேன்.
தீபக் காலையில் உறுதியளித்தது போல மாலையில் வீட்டிற்கு முதல் ஆளாகப் பறந்து செல்லாமல் கால்களை நகர விடாமல் பின்னிக் கொண்டிருந்தான். வியப்பு எனக்குள் தாண்டவமாடியது. எட்டு மற்றும் ஏழாம் வகுப்புப் படிக்கும் ஓர் ஐந்தாறு மாணவர்கள் மட்டும் நிறைந்த பள்ளிப் பாதுகாப்புப் படைக்கும் ஒரே ஆச்சர்யம். எப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுடன் போட்டிப் போட்டுக்கொண்டு ஓடி ஒளிவதையே வாடிக்கையாக வைத்திருப்பவன் இன்று கடைசியாகக் கூட ஓடாமல் நிற்கிறானே!
மெல்ல என்னைப் பார்த்தார்கள். என்ன நடக்கிறது என்பது போல்.
"நாந்தான் காலையிலேயே ஒன்கிட்ட தெளிவா சொன்னேனே!...நீ சாயந்தரம் பூட்ட இருக்க வேணாம்னு? அப்பறம் ஏன்?..."
"இல்லை சார்! நான் இருக்கேன் சார்!"
முகம் கோணியது. உடல் குழைந்தது. முகத்தில் ஒருவித குளுமை படர்ந்து புன்னகையும் வெட்கமும் புணையல் போட்டுக்கொண்டு இருந்தது.
"அவிங்க தான் ஒன்னைக் கிண்டல் கேலிப் பண்றாங்கன்னு சொன்னீயேடா?"
நானும் விடவில்லை. மற்றவர்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
"பரவாயில்ல சார்! நானும் இனிமே இவுங்க கூட ஒத்தாசை பண்ணிட்டு வூட்டுக்குப் போறேன் சார்!"
எனக்கு கண்ணீரே வந்து விடும் போலிருந்தது. அவனை அப்படியே வாரிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவன் சொன்னதைக் கேட்ட அவனது நண்பர்கள் தம் தவறை உணர்ந்து அவனை மனதார ஏற்றுக்கொள்ள நினைத்ததை அவரகளது கனத்த மௌனமே காட்டிக் கொடுத்து விட்டது.
காலம் கடந்த மன்னிப்பு சில நேரங்களில் யாருக்கும் எந்த பலனையும் தராமல் கூட போய்விடக் கூடும். வெகு சீக்கிரத்தில் தரப்படும் மன்னிப்பே எல்லாவற்றையும் விட மேலானது. நெறிபிறழும் மனித மனம் அப்படி கொடுக்கப்படும் மன்னிப்பால் தன்னைத் திருத்திக் கொள்ளும் என்பது அன்று என் கண்முன் நிரூபணம் ஆனது. அந்தவகையில் தீபக் அன்று எனக்கு மாணவனாகத் தெரியவில்லை. மன்னிப்பின் மகத்துவம் புரிய வைத்த மகானாகக் காட்சியளித்தான்.
வகுப்பு தொடரும்...
எழுத்தாளர் மணி கணேசன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...