தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் நடத்த தமிழக அரசு
ஏற்பாடு செய்துள்ளது.
கட்டிடங்கள் திறப்பு
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின்
கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அந்த பிரிவு மாணவ-மாணவிகள் இடைநிற்றல்
இன்றி கல்வி கற்க கல்வி உதவித்தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதி
கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி
வருகிறது.
அந்த வகையில், தென்காசி, ராமநாதபுரம், பெரம்பலூர், மாவட்டங்களில் மொத்தம்
ரூ.16.98 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதி கட்டிடங்களை அமைச்சர்
ராஜகண்ணப்பன், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது திறந்து
வைத்தார்.
தேர்தலுக்கு முன்பே தேர்வு
பின்னர் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன்
அளித்த பேட்டி வருமாறு:-
பல்கலைக்கழகங்களில் தமிழ் தெரிந்த துணை வேந்தர்கள் இருந்தால், அவரிடம்
மக்கள் பேசக்கூடிய அளவில் இருக்கும். தற்போது 3 துணை வேந்தர் காலியிடங்கள்
உள்ளன. அதற்கான குழு பரிந்துரை செய்த பிறகு நியமனம் செய்யப்படுவார்கள்.
அதற்கான ஒப்புதலை கவர்னர் அளிப்பார் என்று நம்புகிறேன். துணை வேந்தர் தமிழ்
தெரிந்தவராக இருந்தால் பல்கலைக்கழகத்திற்கு நல்லது. பல்வேறு பிரச்சினைகளை
மாணவர்கள், ஆசிரியர்களிடம் பேசி தீர்வுகாண எளிதாக இருக்கும்.
சேலம் துணை வேந்தர் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் அதைப்பற்றி இங்கு பேச
முடியாது. சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், திறந்த நிலை
பி.எட்., எம்.எட். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணை வேந்தர்கள் நியமனம்
பற்றி முதல்-அமைச்சருடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும். கவர்னரின்
ஒப்புதலுக்காக சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
அதுபற்றி
கவர்னரிடமே முதல்-அமைச்சர் பேசியிருக்கிறார். இதில், அரசியல் அமைப்பு
சாசனத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். அதற்கு கவர்னர் சரி
என்று கூறியுள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது, தேர்தலுக்கு முன்பே பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
என்று நீங்கள் கேட்டால், தேர்தலுக்கு முன்பே அவற்றை முடிக்க வாய்ப்புள்ளது.
இந்த மாதம் 3-ம் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்று
கூறுகிறார்கள். அதை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...