பள்ளி மாணவர்களுக்கான காணொலி பாடங்கள் அடங்கிய மணற்கேணி இணையதள திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் 100பேரை கண்டறிந்து உலகத்தரம் வாய்ந்தகல்வியை சிவ் நாடார்அறக்கட்டளை வழங்கஉள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், சிவ்நாடார் அறக்கட்டளை நிர்வாகி சுந்தர் ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இதனிடையே, 1 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளி பாடங்கள் அனைத்தும் 2டி, 3டி வடிவில் காணொலிகளாக வடிவமைக்கப்பட்டு மணற்கேணி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான வரவேற்பை கருத்தில்கொண்டு மணற்கேணி திட்டத்துக்காக புதிதாக இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவும் தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த மணற்கேணி இணையதளத்தை (manarkeni.tnschools.gov.in) அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: நவீன தொழில்நுட்பம் வந்தாலும் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்தும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
சட்டப்பேரவை வரலாற்றில் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதைப் பார்த்து அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவார்கள் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...